மீத்தேன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த ஜோ பைடன் வலியுறுத்தல்

18.09.2021 15:01:37

'காலநிலை மாற்றத்துக்கு எதிரான போரில் மீத்தேன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் கவனம் கொள்ள வேண்டும்' என, உலக நாடுகளின் தலைவர்களிடம் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.

பூமியின் வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இது தொடர்ந்தால் 2040ல் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். 2 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் மிகப்பெரிய பேரழிவு ஏற்படும். மனித இனம் மட்டுமின்றி பிற உயிரினங்களும் வாழ முடியாத சூழல் உருவாகும். காலநிலை மாற்றத்தாலேயே மோசமான அளவு மழை வெள்ளம், வறட்சி, காட்டுத் தீ ஆகியவை ஏற்படும்' என, விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தற்போது, மேற்கு ஐரோப்பாவின் ஜெர்மனி, நெதர்லாந்து, லக்சம்பர்க், பெல்ஜியம், ப்ரூசல்ஸ் ஆகிய நாடுகளிலும் காலநிலை மாற்றத்தால் பெரும் இயற்கை பேரிடர்கள் நிகழ்ந்து வருகின்றன.


இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்து உள்ளதாவது: காலநிலை மாற்றத்துக்கு எதிரான போரில் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் உலகத் தலைவர்கள் கவனம் கொள்ள வேண்டும். உலகளாவிய மீத்தேன் உமிழ்வை 2030க்குள் 30 சதவீதம் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்துள்ள ஒப்பந்தத்தில் பிற நாடுகள் சேருவதை வலியுறுத்துகிறோம். இம்மாதிரியான நடவடிக்கைகள் உலக வெப்பமயமாக்கலை உடனடியாகக் குறைத்துவிடாது. ஆனால், பொது சுகாதாரம் மற்றும் விவசாய உற்பத்தியை மேம்படுத்தும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.