த.வெ.க. தலைவர் விஜய்யின் பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்?
|
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு த.வெ.க. தலைவர் விஜய், இன்று (28.03.2026) பெரம்பூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாகக் கூறப்பட்டது. இதற்காக எம்.கே.பி நகர் பேருந்து நிறுத்தம் அருகே பரப்புரை மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என தவெக தரப்பில் கடந்த 25ஆம் தேதி தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டது. இத்தகைய சூழலில் தான், எம்.கே.பி நகர் பேருந்து நிறுத்தம் பகுதி என்பது நெருக்கடியான இடம் என்பதாலும், அந்த இடத்தில் 3 ஆயிர பேர் கூட முடியாது என கூறி விஜய்யின் பிரச்சாரத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. மேலும் மாற்று இடம் கோரி விண்ணப்பிக்க தவெகவுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தியது. |
|
இந்த விவகாரத்திற்கு தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல் அதிகாரிகள் திமுகவுக்கு ஆதரவாக உள்ளனர் என பரபரப்பு குற்றச்சாட்டையும் முன்வைத்தார். இந்நிலையில் இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் சார்பில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெரம்பூர் சட்டமன்ற தொகுதி, முல்லை நகர் பகுதியில் ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், மாநகராட்சியால் திடீரென பணிகள் மேற்கொள்ளப்பட்டு அனுமதி வழங்காத சூழல் ஏற்படுத்தப்பட்டதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்விடத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியால் எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை மற்றும் புதிய பணிகள் எதுவும் ஆரம்பிக்கப்படவும் இல்லை. சென்னை குடிநீர் வாரியத்தால் குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பை சரிசெய்ய மிகக் குறுகிய பரப்பளவில் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவையும் உடனடியாக நிறைவு செய்யப்பட்டுள்ளன. எனவே, அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு மேற்கண்ட பணிகள் காரணமாக காட்டப்படுவது முற்றிலும் தவறான தகவலாகும். கூட்டத்திற்கான அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரின் ஆணையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்ற தகவல் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த ஆணையில், “பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் வட சென்னை மாவட்ட செயலாளர் சிவா, அக்கட்சியின் தலைவர் .விஜய் பங்குபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம். 28.03.2026 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை அனுமதி கோரியுள்ளார். மேலும், பிரச்சார வாகனம் பேசின் பாலத்திலிருந்து தொடங்கி, முல்லை நகர் சந்திப்பு பகுதியில் தெருமுனை பிரச்சாரம் செய்வதற்கும், அதனைத் தொடர்ந்து அம்பேத்கர் கல்லூரி முதல் சர்மா நகர் வரை சாலை வழியாக சென்று, பின் வில்லிவாக்கத்தில் முடிவு பெறுவதாகவும், மேற்படி முல்லை நகர் சந்திப்பில் நடைபெறும் தெருமுனை பிரச்சாரக் கூட்டத்திற்கு சுமார் 3,000 ஆதரவாளர்கள் அல்லது நபர்கள் வரை கூடுவார்கள் எனவும், சுமார் 20 ஒலி பெருக்கிகள் பயன்படுத்தப்பட இருப்பதாகவும், இந் நிகழ்விற்கு உரிய அனுமதி வழங்குமாறும் கோரியிருந்தார். இது தொடர்பாக உரிய அறிக்கை மற்றும் கருத்துருவினை அனுப்பி வைக்கும்படி, தொடர்புடைய துறைகளிடம் கோரப்பட்டது. அதன்படி எம்.கே.பி நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளரின் அறிக்கையில், ‘மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ள முல்லை நகர் சந்திப்பானது சென்னை மாநகர தேர்தல் நடத்தும் அலுவலரால் எஸ்.எம். நகர் 82 ஆவது பிளாக் சந்திப்பு என குறிப்பிட்டு சிறிய அளவிலான தெருமுனைப் பிரச்சாரம் நடத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் மனுவில் முல்லை நகர் சந்திப்பில் தெருமுனை பிரச்சாரம் நடத்துவதற்கு பங்கு பெறுவோர்களின் எண்ணிக்கை 3000 என குறிப்பிடப்பட்டுள்ளதால் அனுமதி வழங்க பரிந்துரை செய்ய இயலாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. எனவே மனுதாரர் தங்களது பிரச்சாரம் நடத்த வேறு ஒரு இடத்தினை தேர்வு செய்து மனு அளித்தால் அனுமதி அளிப்பது குறித்து பரிசீலனை செய்யுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது. எனவே முல்லை நகர் சந்திப்பு பகுதி சுமார் 3,000 ஆதரவாளர்கள் மற்றும்நபர்கள் கூடுவதற்கு உகந்த இடம் அல்ல என்று குறிப்பிட்டு, மனுதாரரின் பிரச்சாரம் தொடர்பான அனுமதிக்கு தடையின்மைச் சான்று வழங்காததால் எம்.கே.பி நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளரின் பரிந்துரையினை ஏற்று, மனுதாரரின் பிரச்சாரம் தொடர்பான அனுமதி கோரும் மனு நிராகரித்து உத்தரவிடப்படுகிறது” என பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார். |