நாடாளுமன்றத்தை இந்த ஆண்டு கலைக்கப்போவதில்லை

24.07.2024 07:54:36

வரவு – செலவு திட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கு மாத்திரமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், நாடாளுமன்றத்தை இந்த ஆண்டு கலைக்கப்போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனை அறிவித்துள்ளார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

“வரவு – செலவு திட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கு மாத்திரமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் மாத்திரமே இடம்பெறும்.

நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது. பொதுத் தேர்தலும் இந்த ஆண்டு இடம்பெறமாட்டாது.

அரசியலமைப்பின் பிரகாரம் நடத்தப்பட வேண்டிய தேர்தல்கள் அனைத்தும் முறைப்படி நடத்தப்படும்.
ஜனாதிபதித் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே காலத்தை தாழ்த்தாமல் தேர்தல் நடத்தப்படும். ஆனால் இரண்டு தேர்தல்களை நடத்துவதற்கு

இவ்வாண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்படவில்லை.

இந்த ஆண்டுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறுபவர்கள் கனவுலகத்தில் வாழ்பவர்கள். நாடாளுமன்றத்திற்கு இன்னும் ஆயுள் உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், அபிவிருத்தி குழுக்களின் தலைவர்கள் என்ற அடிப்படையில் வருடத்துக்கு குறிப்பிட்டளவு நிதி ஒதுக்கப்படும்.

 

அந்த நிதியில் பல்வேறு வேலைத்திட்டங்களுக்காக செலவிடப்படும்.

ஆனால் தேர்தலை இலக்காகக் கொண்டு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகச் சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அரசாங்கம் அபிவிருத்தியை தேர்தலுக்காக முன்னெடுக்கவில்லை” என பந்துல குணவர்தன மேலும் தொிவித்தாா்.