யூரோ கிண்ண கால்பந்து தொடர்: டென்மார்க்கை வீழ்த்தி இங்கிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் !

08.07.2021 10:24:48

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும், யூ.இ.எஃப்.ஏ யூரோ கிண்ண கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

வெம்ப்ளி விளையாட்டரங்களில் உள்ளூர் நேரப்படி இன்று (வியாழக்கிழமை) அதிகாலை நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியும் டென்மார்க் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் சிறப்பான வெற்றியை பதிவுசெய்தது.

இதில் இங்கிலாந்து அணிக்கு டென்மார்க் வீரரான சிமோன் மூலம் போட்டியின் 39ஆவது நிமிடத்தில் ஒன் கோலொன்று பெறப்பட்டது.

மேலும், இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஹரி கேன், மேலதிக நேரமான போட்டியின் 104ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

டென்மார்க் அணி சார்பில், மிக்கேல் டெம்ஸ்கார்ட் போட்டியின் 30ஆவது நிமிடத்தில் அணிக்காக ஒரு கோலை அடித்துக் கொடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ள இங்கிலாந்து அணி, ஜுலை 12ஆம் திகதி நடைபெறவுள்ள சம்பியன் கிண்ணத்துக்கான போட்டியில் இத்தாலி அணியை எதிர்கொள்ளவுள்ளது.