'நீங்க கொடுத்த பதவி வேண்டாம்' .
|
2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சேர்ந்து வருகின்றனர். ஏற்கனவே அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் நான்கு பேர் ராஜினாமா மற்றும் விராலிமலை தொகுதியைச் சேர்ந்த விஜயபாஸ்கர் ராஜினாமா, திருச்சி கிழக்கு என ஆறு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வர உள்ளது. தொடர்ந்து கரூர் தொகுதி எம்எல்ஏ பதவியை எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ராஜினாமா செய்துள்ளாதால் ஏழாவதாக கரூர் தொகுதிக்கும் அடுத்த ஆறு மாதத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதற்கான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
|
|
தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் நாளை (02/07/2026) தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் இணைய உள்ளனர். அதேநேரம் அதிமுகவில் தலைமை மீது ஏற்பட்ட முரண் காரணமாக எஸ்.பி.வேலுமணி தலைமையில் தனி அணியாக 25 எம்எல்ஏக்கள் பிரிந்து சென்ற நிலையில் அவர்களுடைய கட்சி பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்திருந்தார். பின்னர் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து மீண்டும் கட்சியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் பலருக்குப் பொறுப்புகள் வழங்கப்பட்டது. சிலருக்கு மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படவில்லை. குறிப்பாக எஸ்.பி.வேலுமணி உடன் வந்தவர்களுக்கும் மீண்டும் பதவி வழங்கவில்லை என எஸ்.பி.வேலுமணி அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதிமுக தொண்டர்களாக நாங்கள் செயல்படுகிறோம் என தங்கமணி, வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், 'உங்கள் விருப்பப்படி பொறுப்புகளை வழங்கி உள்ளீர்கள். அவை எங்களுக்கு வேண்டாம். விலக்கப்பட்டவர்களுக்கு உறுதியளித்தபடி மீண்டும் அவர்கள் வகித்த பதவி வழங்கப்படவில்லை. கட்சி நலனை எடப்பாடி பழனிசாமி கருத்தில் கொள்ளாததால் தான் அதிமுகவினர் சாரை சாரையாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகின்றனர். பொதுச் செயலாளராக நீங்கள் எடுத்த முடிவால் 2021, 2024, 2026 என மூன்று தேர்தல்களிலும் தொடர் தோல்வியை அதிமுக சந்தித்துள்ளது' எனக் கூட்டாக அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர். |