ஜேர்மனியில் திடீரென சீல் வைக்கப்பட்ட ராணுவ தளம்!
ஜேர்மனியில் கொலோன் (Cologne) விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ராணுவ தளம் சீல் வைக்கப்பட்டுள்ளது. நாசவேலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகவத்தின் பேரில், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அங்கு பணிபுரியும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் குழாய் நீரை குடிக்க வேண்டாம் என அறிவுறுத்தபட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது. இது 4,300 சிப்பாய்கள் மற்றும் 1,200 சிவிலியன் ஊழியர்களைக் கொண்ட தளமாகும். |
இந்த வளாகத்திற்குள் யாரோ பலவந்தமாக நுழைந்து தண்ணீரை மாசுபடுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஜேர்மன் படைகளுக்கு எதிரான சந்தேகத்திற்குரிய நாசவேலை குறித்து பொலிஸ், இராணுவ பொலிஸார் மற்றும் இராணுவ புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகின்றனர். கொலோன்-வான் தளம் சான்சிலர் ஓலாவ் ஷொல்ஸ் மற்றும் அவரது அமைச்சர்களின் பயணத்திற்காக பயன்படுத்தப்படும் இராணுவ விமானங்களின் தொகுப்பின் தாயகமாக உள்ளது. பெர்லினில் உள்ள பிராந்திய கட்டுப்பாட்டின் செய்தித் தொடர்பாளர் தளம் மூடப்பட்டுவிட்டது என்பதை உறுதிப்படுத்தினார், ஆனால் விரிவாக கூற மறுத்துவிட்டார். இதுகுறித்து இராணுவ புலனாய்வு அமைப்பு உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை. இது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று கொலோன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாசவேலைகள், சைபர் தாக்குதல்கள் உட்பட ரஷ்யாவால் நடத்தப்படும் விரோத நடவடிக்கைகள் குறித்து நேட்டோ முன்னதாக எச்சரித்திருந்தது. போலந்து, ஜேர்மனி, பிரித்தானியா மற்றும் செக் குடியரசு போன்ற பல நாடுகளில் கடந்த மாதங்களில் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. |