பொங்கல் பண்டிகையில் விஜய், அஜித் படங்கள் மோதுவது உறுதியானது

29.10.2022 16:01:45

9 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பொங்கல் பண்டிகையில் விஜய், அஜித் படங்கள் மோதுவது உறுதியானது. பொங்கல் பண்டிகையில் விஜய் நடிக்கும் வாரிசு படம் திரைக்கு வரும் என்பதை படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்து இருந்தனர். அஜித்குமாரின் துணிவு படமும் பொங்கலுக்கு வெளியாகலாம் என்று யூகமான தகவல்கள் வலைத்தளத்தில் பரவி வந்தாலும், பட நிறுவனத்திடம் இருந்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வராமல் இருந்தது. இந்த நிலையில் துணிவு படமும் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை தியேட்டர்களில் வெளியிடும் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் பட நிறுவனம் பெற்றதுடன் பொங்கல் வெளியீட்டையும் உறுதி செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. துணிவு படத்தை முதலில் தீபாவளி பண்டிகையில் திரையிட முடிவு செய்தனர். ஆனால் படவேலைகள் முடியாததால் தள்ளி வைத்து இப்போது பொங்கலுக்கு கொண்டு வருகிறார்கள். 2013 பொங்கல் பண்டிகையில் விஜய்யின் ஜில்லாவும், அஜித்தின் வீரம் படமும் வெளியானது. தற்போது 9 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீசாவது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வாரிசு படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிபள்ளி இயக்கி உள்ளார். இதில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும், பிரபு, குஷ்பு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஷாம், ஸ்ரீகாந்த், யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். வினோத் இயக்கி உள்ள துணிவு படத்தில் அஜித்குமாருடன் மஞ்சு வாரியர், ஜான் கொக்கென், யோகிபாபு, மகாநதி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.