SBI வங்கிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு!!

07.03.2024 08:08:45

 தேர்தல் பத்திரம் தொடர்பான தகவலை வெளியிட அவகாசம் கோரிய பாரத ஸ்டேட் வங்கிக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 15ம் தேதி, “ஒன்றிய பாஜ அரசால் கடந்த 2017ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தேர்தல் பத்திர திட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது.அதை ரத்து செய்கிறோம். மேலும் பாரத ஸ்டேட் வங்கி உடனடியாக தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும். 2019 ஏப்ரல் 12ம் தேதி முதல் தீர்ப்பு வரும் வரை (பிப்.15) விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள், அதை வாங்கியோர், பெற்றவர்கள் விவரங்களை மார்ச் 6ம் தேதிக்குள் (நேற்று) தேர்தல் ஆணையத்தில் பாரத ஸ்டேட் வங்கி ஒப்படைக்க வேண்டும். தொடர்ந்து 13ம் தேதிக்குள் அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வௌியிட வேண்டும்” என உத்தரவு பிறப்பித்திருந்தது.

பாரத ஸ்டேட் வங்கிக்கு அளிக்கப்பட்ட காலஅவகாசம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், நேற்று முன்தினம் பாரத ஸ்டேட் வங்கி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க ஜூன் 30ம் தேதி வரை காலஅவகாசம் வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தது. வரும் ஜூன் 16ம் தேதியுடன் மோடி தலைமையிலான பாஜ அரசின் பதவிக்காலம் முடிவடைவதால் அதற்கு முன் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில் தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை வழங்க பாரத ஸ்டேட் வங்கி காலஅவகாசம் கோரியிருப்பதற்கு காங்கிரஸ் கண்டனம், எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட தேர்தல் முடியும் வரை பாரத ஸ்டேட் வங்கி அவகாசம் கோரியிருப்பது உச்சநீதிமன்றத்தையும் மக்களையும் ஏமாற்றும் செயல் என அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கி மீது உச்சநீதிமன்றத்தில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை SBI வேண்டுமென்றே அவமதிப்பதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.