இஸ்ரேலிற்கு அமெரிக்கா எச்சரிக்கை

13.05.2024 07:51:13

இஸ்ரேல் ரபாவின் மீது இராணுவநடவடிக்கையை முன்னெடுத்தால் அந்த நாட்டிற்கான மேலும் பல ஆயுத விநியோகத்தினை நிறுத்தவேண்டிய நிலையேற்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ரபாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் இராணுவநடவடிக்கை காரணமாக பாரிய உயிரிழப்புகள் ஏற்படலாம் என்ற கரிசனைகளை தொடர்ந்து குண்டுகள் அடங்கிய கப்பலொன்றை இஸ்ரேலிற்கு அனுப்புவதை நிறுத்தியுள்ளது.

இந்த நிலையில் அப்பாவி மக்களின் கொடுரமான உயிரிழப்புகளை அன்டனி பிளிங்கென் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேல் மேலும் இடங்களை கைப்பற்றினால் ஒரு வெற்றிடம் உருவாகும் அந்த வெற்றிடம் குழப்பம் அராஜகம் மற்றும் இறுதியில் ஹமாசினால் நிரப்பப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ரபாவிலிருந்து மக்களை பலவந்தமாக வெளியேற்றுவது என்ற இஸ்ரேலின் பிடிவாதத்தினால் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என அன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் தன்னை பாதுகாப்பதற்கு உதவுவது குறித்து ஜனாதிபதி ஜோபைடன் உறுதியாகவுள்ளார் என என்பிசி சிபிசிக்கு தெரிவித்துள்ள  அன்டனி பிளிங்கென் குண்டுகளை விநியோகிப்பதை மாத்திரம் அமெரிக்கா தற்போது நிறுத்திவைத்துள்ளது  எனினும் இஸ்ரேல் ரபா மீது முழுமையான தாக்குதலை மேற்கொண்டால் இந்த நிலை மாறாலாம் என தெரிவித்துள்ளார்.