தமிழ்க்கட்சிகளை சந்திக்கும் லாமி!
|
பிரித்தானிய துணைப் பிரதமரான டேவிட் லம்மி, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இன்று(17) இலங்கைக்கு இராஜதந்திரப் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இரு நாடுகளுக்கிடையிலான அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் இந்தப் பயணம் அமையவுள்ளது. |
|
இந்தப் பயணத்தில் பிரித்தானியதுணைப் பிரதமர் டேவிட் லம்மி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். டேவிட் லம்மி இன்று காலை இலங்கை வந்தடைந்து, திட்டமிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் இன்று மாலையே இலங்கையிலிருந்து புறப்படவுள்ளார். இந்தக் குறுகிய பயணத்தின்போது அவர் தமிழ்த் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பு கொழும்பில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் ஹவுஸில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெறவுள்ளது. பிரிட்டன் துணைப் பிரதமருடனான சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். இந்தப் பயணத்தின் பிரதான அம்சமாக ஐ.நா. பணியகத்தில் நடைபெறும் நிகழ்வில் குழந்தைகள் பராமரிப்புக்கான உலகளாவிய பரப்புரைக்கான சாசனம் தொடர்பான உடன்பாட்டிலும் டேவிட் லம்மி கையெழுத்திடுவார். |