உக்ரைன் வந்தடைந்த F-16 போர் விமானங்கள்
உக்ரைன் F-16 போர் விமானங்களை பயன்படுத்தத் தொடங்கி இருப்பதாக அந்நாட்டின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், உக்ரைன் விமானிகள் நீண்ட காத்திருப்புக்கு பிறகு F-16 போர் விமானங்களை நாட்டின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தத் தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். |
F-16 போர் விமானங்கள் முழுக்க முழுக்க அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட போர் விமானமாகும், உக்ரைனால் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த போர் விமானம் கிட்டத்தட்ட ரஷ்ய படையெடுப்பு தொடங்கி 29 மாதங்களுக்கு பிறகு வந்தடைந்துள்ளது. இரண்டு F-16 போர் விமானங்கள் தரையிலும், இரண்டு F-16 போர் விமானங்கள் வானிலும் பறந்து கொண்டிருந்த போது, விமான தளத்தில் நின்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி F-16 போர் விமான பயன்பாடு குறித்து அறிவித்தார். மேலும், F-16 போர் விமானங்கள் தற்போது உக்ரைனில் உள்ளது, இந்த ஜெட் விமானங்களில் தேர்ச்சி பெற்ற நமது விமானிகள் ஏற்கனவே நமது நாட்டின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர் என்பதில் பெருமையடைகிறேன் என்று தெரிவித்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக, விமான தளம், எத்தனை விமானங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது போன்ற விவரங்கள் தெளிவாக வழங்கப்படவில்லை. |