முடிவுக்கு வந்த கடும் இழுபறி!

23.03.2026 14:45:11

தமிழகத்தில் திமுக காங்கிரஸ் இடையே நீண்ட இழுபறிக்கு பிறகு தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது போலவே, புதுவையிலும் திமுக - காங்கிரஸ் இடையே நீண்ட இழுபறிக்கு பிறகு தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி திமுக 12 தொகுதிகளிலும், காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், விசிக, இந்திய கம்யூனிஸ்ட் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது.

தேர்தலுக்கான மனு தாக்கல் கடந்த 16 ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. நாளை திங்கட்கிழமையுடன் வேட்பு மனுதாக்கல் நிறைவடைகிறது. நாளை ஒரு நாள் மட்டுமே மனு தாக்கலுக்கு அவகாசம் உள்ளது. புதுவையில் மொத்தம் 30 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் என். ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஒரு புறமும், திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒருபுறமும், புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என மும்முனை போட்டி நிலவுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய நாளை ஒரு நாளே இருப்பதால் தவெக சார்பில் 30 வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்த தேசிய ஜனநாயக கூட்டணியில், இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டு தொகுதி பங்கீடு முடிவடைந்தது.

ஆனால் சில தொகுதிகளில் இன்னமும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. அதிமுகவுக்கு இந்த கூட்டணியில் 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. என் ஆர் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் பாஜக 10 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இது ஒருபுறம் இருக்க திமுக காங்கிரசிலும் தொடர்ந்து தொகுதி பங்கீடு செய்வதில் தொடர் இழுபறி நீடித்து வந்தது. பேச்சுவார்த்தை ஒரு வாரமாக நடந்தும், இன்று மாலை வரை தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் குறித்து முடிவு செய்யவில்லை.

காங்கிரஸ் 17 இடங்களை எடுத்து கொண்டு தி.மு.க. வுக்கு 13 இடங்களை ஒதுக்கி அதில் விடுதலை சிறுத்தை, இந்திய கம்யூனிஸ்ட் தலா ஒரு தொகுதி கொடுக்கும்படி கூறியது. ஆனால் 30 தொகுதிகளை சமமாக பிரித்து கூட்டணி கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி கொடுக்க தி.மு.க. வலியுறுத்தியது. காங்கிரஸ் கட்சிதான் கூட்டணிக்கு தலைமை வகிப்பதால், கேட்கும் தொகுதிகளை தர வேண்டும் என கூறியதால், உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் கூட்டணியை இறுதி செய்ய தி.மு.க. தலைமை உத்தர விட்டது. திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியானது சென்னை சென்ற புதுச்சேரி தி.மு.க. மேலிட தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி. மற்றும் தி.மு.க. மாநில அமைப்பாளர் சிவா ஆகியோர் இன்று காலை ஆழ்வார்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வீட்டில் அவரை சந்தித்து புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்து எடுத்து கூறினர்.

அப்போது ப. சிதம்பரமும் கூட்டணி நிலவரம் குறித்து முதல்வர் ஸ்டாலி னுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் இரவில் திமுக காங்கிரஸ் இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதன்படி காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளில் போட்டி என்றும் திமுக 12 தொகுதிகளில் போட்டி என்றும் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல் வெளியானது. விசிக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.