திருமண பலாத்காரம் குற்றமா, இல்லையா?

11.05.2022 17:00:43

மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவன் உறவு கொண்டால், அதை பாலியல் குற்றமாக கருத முடியாது என இந்திய தண்டனைச் சட்டத்தின் 375-வது பிரிவு கூறுகிறது. திருமண பலாத்காரத்தில் ஈடுபடும் ஆண்களுக்கு கற்பழிப்பு சட்டங்களில் இருந்து விலக்கு அளித்துள்ள இந்த பிரிவை நீக்கக் கோரியும், மனைவியின் விருப்பமில்லாமல் உறவு வைத்தால் அதை குற்றமாக்கக் கோரியும், டெல்லி ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. நீதிபதிகள் ராஜிவ் ஷக்தர், ஹரி சங்கர் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. 

 

நீண்டகாலமாக நடைபெற்ற இவ்வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

 

இந்நிலையில், திருமண பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். 

 

இந்தியத் தண்டனைச் சட்டம் 375-ல் கணவன்மாருக்கு அளிக்கப்பட்டுள்ள தளர்வு இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. அதனால் கணவன் பாலியல் பலாத்காரம் செய்தாலும் அதை குற்றமாகத்தான் பார்க்க வேண்டும். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நீதிபதி ராஜீவ் ஷக்தர் தீர்ப்பு கூறியுள்ளார்.

 

விதிவிலக்கு வழங்குவது சமத்துவம், பேச்சுரிமை மற்றும் கருத்துச் சுதந்திரம் மற்றும் வாழ்க்கை பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கான உரிமையை வழங்கும் அரசியலமைப்பு சட்டம் 14, 19 மற்றும் 21 ஆகிய பிரிவுகளை மீறுவதாக அவர் கூறினார்.

 

எனது கற்றறிந்த சகோதரருடன் என்னால் உடன்பட முடியவில்லை, என்று நீதிபதி சங்கர் கூறினார். கணவனின் பாலியல் பலாத்காரத்தைக் குற்றமாகப் பார்க்க முடியாது, அதனால் அளிக்கப்பட்டுள்ள தளர்வு சரியானதுதான் என்று அவர் தனது தீர்ப்பில் கூறியுள்ளார். 

 

ஒரு அமர்வில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.