ஓர் ஆண்டில் ரூ.1,000 கோடி செலவில் 1,500 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்

20.05.2022 15:42:23

விரைவில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 1500 கோவிலுக்கு குடமுழுக்கு இன்னும் ஓராண்டில் நடத்துவதற்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் கூறி உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திராவிட மாடல் ஆட்சியின் ஓராண்டு நிறைவு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் எதிரே உள்ள மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் நகர்மன்ற துணைத் தலைவரும், ஒன்றிய செயலாளருமான ரமேஷ் வரவேற்று பேசினார்.

நகர்மன்ற தலைவர் சிவ ஆனந்தி ரமேஷ், நகர பொறுப்பாளர் வாள்சுடலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு பேசியதாவது:-

கொரோனா காலகட்டத்தில் நாங்கள் எதிர்கட்சியாக இருந்தோம். அப்போது எல்லோரும் வீட்டுக்குள் முடங்கி கிடந்தார்கள். மக்கள் கையில் பணம் இல்லை.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ 5ஆயிரம் கொடுக்க சொன்னார் ஸ்டாலின். அது கொடுக்க நிதி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார். இன்று ஸ்டாலின் குடும்பத்திற்கு ரூ.4 ஆயிரம் கொடுத்து விட்டார்.

பஸ்களில் இலவச பயணத்தால் மகளிருக்கு மாதம் ரூ.2,300 மிச்சமாகிறது. ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோவில் நிலங்கள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளது. ரூ.2,660 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் தனியாரிடமிருந்து மீட்டது இந்த ஆட்சிதான். ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை கொடுத்துள்ளோம்.

அ.தி.மு.க.வின் 10 ஆண்டு காலத்தில் எந்த தொழிற்சாலையும் கொண்டுவரவில்லை. ரூ.70 ஆயிரம் கோடியில் தொழில்முனைவோரை கொண்டுவந்து ஒரு லட்சத்து 90 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கு வழிவகை செய்தார் ஸ்டாலின். இதுதான் திராவிட மாடல் ஆட்சியாகும்.

நம்மை காக்கும் 48 திட்டம் மூலமாக 58190 காக்கப்பட்டுள்ளனர். இதற்காக அரசு 51 கோடி ரூபாயை இந்த அரசு செலவு செய்துள்ளது.

பெண்கள் படிப்பிற்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் கொடுக்கப்பட்டு வருகிறது. மதிய உணவு திட்டத்தை காமராஜர் கொண்டுவந்தாலும் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டமாக மாற்றினார். ஆனால் சாப்பிடும் குழந்தைகளுக்கு புரதச்சத்து தேவை என்று வாரத்தில் 5 நாட்களுக்கு முட்டை வழங்கினார் கலைஞர் கருணாநிதி.

இன்று ஸ்டாலின் மிகத் திறமையான நிர்வாக ஆட்சியைப் பார்த்து நீதித்துறை, பத்திரிக்கை துறை பாராட்டி வருகின்றது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார் ஸ்டாலின்.

விரைவில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 1500 கோவிலுக்கு குடமுழுக்கு இன்னும் ஓராண்டில் நடத்துவதற்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

ஆன்மிகத்துக்கும் தி.மு.க.வுக்கும் எந்த ஒருவித விரோதமும் கிடையாது. தி.மு.க. எந்த கடவுளுக்கும் எதிரானவர்கள் அல்ல. அவரவர்கள் அவர்கள் கடவுளை வழிபடட்டும். அதில் எங்களுக்கு எந்த விதமான முரண்பாடும் கிடையாது.

நாங்கள் எல்லோருக்கும் சமமானவர்கள் தான் நாங்கள் இந்துக்களுக்கு எதிரி அல்ல.