நம்மை தோற்கடிக்கும் முயற்சி வெற்றி பெறாது

21.07.2022 12:03:11

நம்மை தோற்கடிக்க முயலும் அவர்களது முயற்சி வெற்றி பெறாது என தியாகிகள் தின பேரணியில் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.

மேற்கு வங்காள முதல்-மந்திரி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி கொல்கத்தா நகரில் இன்று நடந்து வரும் தியாகிகள் தின பேரணியில் பேசி வருகிறார். கொரோனா பெருந்தொற்றால் 2 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி நடைபெறாமல் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், பேரணியின்போது அந்த பகுதியில் மழை பெய்தது. எனினும், அதனை புறந்தள்ளி விட்டு மம்தாவின் பேச்சை கேட்க கொட்டும் மழையிலும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கில் மக்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். இதற்காக 3 ஆயிரம் போலீசார் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

தவிர, ஆயிரம் போக்குவரத்து போலீசாரும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பணியில் இறக்கி விடப்பட்டு உள்ளனர். 10 சாலைகளில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டு உள்ளது. பல்வேறு பள்ளி கூடங்களும் மூடப்பட்டு உள்ளன. இந்த நிகழ்ச்சியில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தினரிடையே மம்தா பானர்ஜி பேசும்போது, பா.ஜ.க. ஒவ்வோர் இடத்திலும் உள்ள அரசை தகர்க்க முயற்சிக்கிறது.

இது அவர்களது வேலையாகவே போய்விட்டது. மேற்கு வங்காளத்திலும் அவர்கள் நம்மை தோற்கடிக்க முற்பட்டனர். ஆனால், அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. இங்கே மழை பெய்து கொண்டிருக்கிறது. சாலைகள் முழுவதும் கொட்டும் மழையால் நீர் நிரம்பி உள்ளது. ஆனால் நம்முடைய ஆதரவாளர்கள் இந்த இடத்தில் இருந்து அகன்று செல்லமாட்டார்கள் என கூறியுள்ளார். அவர் தொடர்ந்து பேசும்போது, இனிப்புகள், லஸ்சி மற்றும் தயிர் ஆகியவற்றின் மீதும் கூட ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டு உள்ளது. மக்கள் என்னதான் சாப்பிடுவார்கள்? நோயாளி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் கூட ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது என பேசியுள்ளார்.