அரசு பேருந்தின் தகவல் பலகையில் த.வெ.க. பெயர்!
|
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான (TN 45 M 4853) அரசுப் பேருந்து ஒன்றின் பின்பக்கம் உள்ள எல்.இ.டி தகவல் பலகையில், ஊர்ப் பெயர்களுக்குப் பதிலாக நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியின் பெயர் இடம்பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பேருந்து திருச்சியில் ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்தபோது, அதில் டிஜிட்டல் முறையில் கட்சியின் பெயர் ஒளிபரப்பப்பட்டதைக் கண்டு பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. |
|
இதனைத் தொடர்ந்து, அரசுப் பேருந்தில் அரசியல் கட்சியின் பெயரைப் பயன்படுத்தியது விதிமீறல் எனப் புகார் எழுந்தது. மேலும் இது குறித்துத் தகவல் அறிந்த போக்குவரத்துத் துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பேருந்தின் நடத்துநர் மற்றும் ஓட்டுநரிடம் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இது நடந்ததா அல்லது யாரேனும் வேண்டுமென்றே கட்சியின் பெயரைப் பதிவேற்றம் செய்தனரா என்ற கோணத்தில் துறை ரீதியான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் தொட்ர்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அளித்துள்ளது அதில், “சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோவில் உள்ள பேருந்தானது, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட், திருச்சி மண்டலத்தைச் சேர்ந்த புதிய பேருந்து ஆகும். இப்பேருந்தில் உள்ள மின்னணு வழித்தடப் பலகையில் (Electronic Route Board) சில வாசகங்கள் இடம்பெற்றது குறித்து உடனடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் அந்தப் பேருந்தின் வழித்தடப் பலகையினை இயக்கும் மென்பொருள் பலகையை (Motherboard) ஹேக் (Hack) செய்து, இத்தகைய தவறான வாசகங்களை பதிவிட்டது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்: இச்சம்பவம் நேற்று முன் தினம் (04.04.2026) கவனத்திற்கு வந்தவுடன், உடனடியாக அந்த மின்னணு பலகையின் மதர்போர்டு மாற்றப்பட்டு, சரியான வழித்தட விவரங்கள் பதிவேற்றப்பட்டன. இது போன்ற செயல்கள் இனி நிகழாமல் இருக்கவும், சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், மின்னணு பலகை சேவை வழங்கும் நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |