அக்னிவீரன் குடும்பத்துக்கு ரூ.98 லட்சம் நிவாரணம்

04.07.2024 07:55:29

“தியாகிகளான அக்னிவீரர்களின் குடும்பத்தினர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்பட்டதாக ராஜ்நாத் சிங் கூறினார். ஆனால் அவரது குடும்பத்தினருக்கு அத்தகைய உதவி எதுவும் கிடைக்கவில்லை” என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலளித்தார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி  தியாகி அக்னிவீரரின் குடும்பத்திற்கு நிதியுதவி கிடைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில், உயிரிழந்த அக்னி வீரன் அஜய் குமாரின் குடும்பத்திற்கு ஏற்கனவே ரூ. 98.39 லட்சம் கொடுக்கப்பட்டதாகவும், இறுதி தீர்வாக மொத்தம் ரூ. 1.65 கோடி இருக்கும் என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

ராகுல் காந்தி புதன்கிழமை (ஜூலை 4, 2024) காணொலி ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், “அஜய் குமாரின் தந்தை பணம் எதுவும் பெறவில்லை எனக் கூறினார். மேலும் அக்னி வீரன் விவகாரத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பொய் கூறுகிறார் எனவும் ராகுல் காந்தி குற்றஞ்சாடடியிருந்தார்.

இந்நிலையில் பாதுகாப்புத் தறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமூக ஊடகங்களில் சில பதிவுகள் அக்னிவீர் அஜய்யின் அடுத்த உறவினருக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளன. பணியின் போது உயிரிழந்த அக்னிவீர் அஜய் குமார் செய்த உன்னத தியாகத்திற்கு இந்திய ராணுவம் தலை வணங்குகிறது. இறுதிச் சடங்குகள் முழு ராணுவ மரியாதையுடன் நடைபெற்றது. மொத்த நிலுவைத் தொகையில், அக்னிவீர் அஜய் குடும்பத்திற்கு ஏற்கனவே ரூ.98.39 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பணியின் போது கொல்லப்பட்ட அக்னிவீரர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை பின்வருமாறு:-

 

  • மத்திய அரசின் காப்பீடாக ரூ.48 லட்சம்
  • புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் நிதி நிறுவனங்களிடமிருந்து ரூ.50 லட்சம் காப்பீடு
  • கூடுதல் தொகையாக ரூ.39,000
  • கருணைத்தொகை ரூ.44 லட்சம்
  • ராணுவ நலநிதி ரூ.8 லட்சம்
  • நிலுவைத் தொகை ரூ.13 லட்சம்
  • சேவாநிதி ரூ.2.3 லட்சம் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இதில், முதல் மூன்று பிரிவுகளின் கீழ் உள்ள பணம் அக்னிவீரின் குடும்பத்திற்கு செலுத்தப்பட்டுள்ளது, மீதமுள்ள ரூ 67.3 லட்சம் உரிய நடைமுறைக்குப் பிறகு வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது