பிரபல டப்பிங் கலைஞர் தேவன்குமார் காலமானார்..!
உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நடிகரும் டப்பிங் கலைஞருமான தேவன்குமார் சென்னையில் காலமானார்.
சன் டிவியில் ஒளிபரப்பான ’நாயகி’ மெகா தொடர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகராகத் தேவன்குமார் தனது பயணத்தைத் தொடங்கினார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’கைதி’, விஜய் நடிப்பில் ’மாஸ்டர்’ போன்ற பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளாக ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு போன்ற பல முன்னணி கதாநாயகர்களுக்கும் சண்டைக் காட்சிகளில் குரல் கொடுத்து வந்தவர் தேவன்குமார். மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்துக்கு நெருங்கிய நண்பராக வலம் வந்ததோடு, அவருக்கும் பல படங்களுக்கு சண்டைக் காட்சிகளில் குரல் கொடுத்தவர்.
இந்நிலையில், உடல் நலக்குறைவால் சிகிச்சை எடுத்து வந்த தேவன்குமார் சிகிச்சைப் பலனளிக்காமல் சென்னையில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 4 மணிக்கு ஏவிஎம் மயானத்தில் நடைபெறுகிறது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.