இந்தியா வலியுறுத்தல்!

19.09.2025 08:15:33

மாகாணசபைத் தேர்தலை ஜனநாயக ரீதியில் விரைவாக நடத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தேர்தலை நடத்த சகல அரசியல் கட்சிகளும் ஒருமித்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா புதன்கிழமை (17) பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இந்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, ஹர்ஷண ராஜகருணா, தயாசிறி ஜயசேகர மற்றும் நளின் பண்டார ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போதே உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இதனை வலியுறுத்தியுள்ளார். அத்தோடு இலங்கையின் சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் உள்நாட்டில் முன்னெடுக்கப்படும் இந்திய அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் உயர்ஸ்தானிகருக்குமிடையிலான இந்த சந்திப்பின் போது பரந்தளவிலானதும் பன்முக அடிப்படையிலானதுமான இலங்கை - இந்திய உறவுகள் மற்றும் நாட்டின் அபிவிருத்தி பணிகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.