மக்களை ஏமாற்றி விட்டது அரசாங்கம்!

10.07.2025 08:24:08

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம், அதுதொடர்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அந்த மக்களை ஏமாற்றி இருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான சபை ஒத்துவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

2019 ஜனாதிபதி தேர்தலுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை பயன்படுத்திக்கொண்டு அன்று கோட்டாபய ராஜபக்ஷ் ஜனாதிபதியாக தெரிவானார். அதேபோன்று 2024இல் தேசிய மக்கள் சக்தி, இற்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்காெடுப்பதாக வாக்குறுதியளித்து அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி பதவிக்கு வந்தார்.

அதனால் இந்த தாக்குதல் காரமாக அரசியல் கட்சியாக எமக்கே பாதிப்பு ஏற்பட்டது. அதேபோன்று இந்த தாக்குதலில் பிரதானமாக பாதிக்கப்பட்டது கத்தோலிக்க மக்கள். அடுத்தபடியாக முஸ்லிம் மக்களாகும். அன்று ஏற்பட்ட அழுத்தம் காரணமாக எமது அரசாங்கத்தில் இருந்து முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகினார்கள்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்காெடுப்பதாகவும் தாக்குதலுக்கு சம்பந்தப்பட்டவர்களை சட்டத்துக்கு முன் கொண்டுவருவதாகவும் தெரிவித்து ஆட்சிக்கு வந்த, இந்த அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குறைந்தபட்சம் இந்திய வெளிவிவாக அமைச்சர் நாட்டுக்கு வந்தபோது, இந்தியாவுக்கு தப்பிச்சென்ற சாரா ஜெஸ்மின் தொடர்பில் கேட்டார்களா? ஆனால் அரசாங்கம் இது தொடர்பில் மிகவும் மெத்தன போக்கையே கடைப்பிடித்து வருகிறது. அதனால் அரசாங்கம் இந்த விடயத்தை விரைவுபடுத்துமாறு தெரிவிக்கிறோம்.

மேலும் சஹ்ரானுக்கு மேல் ஒரு தலைவர் இருப்பதாக முன்னாள் சட்டமா அதிபர் தெரிவித்திருந்தார். அப்படியானால் அவர் யார் என்பதை வெளிப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது.

அதேபோன்று இந்த சம்பவம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை குழுவுக்கு சாட்சி வழங்க சென்ற அதிகாரி, சாட்சி தெரிவிப்பதற்கு பதிலாக,பிரதான சூத்திரதாரி யார் என்பதை தூண்டு ஒன்றில் எழுதி கொடுத்தார்.

அது யார் என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.தற்போது பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் இந்த சம்பவம் தொடர்பில் தெரிவிக்கும் அனைத்து விடயங்களும் எமது அரசாங்க காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வெளிவந்த விடயங்களாகும்.

புதிய விடயமாக பிள்ளையானை கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். அதனைத் தவிர வேறு எந்த விடயத்தையும் வெளிப்படுத்தவில்லை.

சிறிய சஹ்ரானின் ஆலாேசகரை கண்டுபிடித்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் உண்மை நிலையை தெரிந்துகொள்ளலாம் என அநுரகுமார திஸாநாயக்க எதிர்க்கட்சியில் இருக்கும்போது தெரிவித்தார்.

ஆனால் தமற்போது அவர் ஜனாதிபதி, சிறிய சஹ்ரான் யார் என்பது தொடர்பில் எப்.பி.ஐ. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அரசாங்கம் இந்த விடயங்களை வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அத்துடன் ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியை வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். எங்கே வெளிப்படுத்தினீர்களா? அரசாங்கம் கத்தோலிக்க மக்களை ஏமாற்றியுள்ளது.

கர்தினால் உள்ளிட்ட கத்தோலிக்க மக்களுக்கு இந்த அரசாங்கத்தின் மீது இருந்த நம்பிக்கை தற்போது இழந்து வருகிறது. கத்தோலிக்க மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது அவர்களை ஏமாற்றி இருக்கிறது.

அதனால் அரசாங்கம் அந்த மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கு தேவையான ஒத்துழைப்பு வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.