இனி 234 தொகுதிகளிலும் உதயசூரியன் தான்.
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், இனிவரும் தேர்தல்களில் திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி கட்சிகள் இல்லாமல் தனித்தே போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் தமிழகம் முழுவதும் தி.மு.க.வின் உட்கட்சி நிலவரம் மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட கருத்துக்கேட்புக் குழுவினர், மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து ரகசிய ஆலோசனைகளை நடத்தினர். இந்த சந்திப்புகளின் போது, பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் மற்றும் அடிமட்ட நிர்வாகிகள் தங்களின் கருத்துக்களை ஆணித்தரமாக பதிவு செய்துள்ளனர்.
அதிமுக, தவெக போன்ற கட்சிகள் தனித்து அல்லது புதிய வியூகங்களுடன் களம் காணும் நிலையில், தி.மு.க.வும் தனது அசல் பலத்தை நிரூபிக்க தனித்து போட்டியிடுவதே சரியாக இருக்கும் என அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்குவதால், தங்களின் சொந்த கட்சித் தொண்டர்களின் உழைப்பு வீணடிக்கப்படுவதாகவும், உள்ளூர் அளவில் தவெக போன்ற புதிய கட்சிகளின் எழுச்சியை தடுக்க தி.மு.க. தனித்து நிற்பதே பலம் என்றும் அவர்கள் குழுவினரிடம் விரிவாக எடுத்துரைத்துள்ளனர். இந்த ரகசிய ரிப்போர்ட் தற்பொழுது அறிவாலய வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.