லிங்குசாமி வழங்கும் 'வடக்கன்' படத்தின் டீசர் வெளியீடு
இயக்குநர் -தயாரிப்பாளர் - விநியோகஸ்தர் என மூன்று பிரிவுகளிலும் தோல்வியை எதிர்கொண்ட இயக்குநர் லிங்குசாமி, சிறிய இடைவெளிக்குப் பிறகு நம்பிக்கையுடன் வழங்கும் 'வடக்கன்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
எழுத்தாளரும், வசனகர்த்தாவுமான பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகும் 'வடக்கன்' எனும் திரைப்படத்தில் குங்குமராஜ் முத்துசாமி, வைரமாலா, ரமேஷ் வைத்யா, பர்வேஷ் மெஹ்ரு, ஷாமீரா, வைரம் பாட்டி, பின்ட்டு, வந்தனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். ஜே. ஜனனி இசையமைத்திருக்கிறார். தமிழகத்தின் அதிகளவில் புலம் பெயர்ந்திருக்கும் வட இந்தியர்களை பற்றி கருத்தியல் ரீதியான பதிவினை பதிவு செய்யும் படைப்பாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை டிஸ்கவரி சினிமா புரொடக்சன் எனும் பட நிறுவனம் சார்பில் புத்தக பதிப்பாளர் எம். வேடியப்பன் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இதன் குறு முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் தமிழகத்தின் மலை சார்ந்த பகுதிகளில் வசிக்கும் பூர்வீக தமிழர்கள் மது போதையில் எந்த பணிகளையும் செய்யாமல் தரையில் வீழ்ந்து கிடப்பதாகவும், இதனால் பணிகளை மேற்கொள்ள வட இந்தியர்கள் வரவழைக்கப்பட்டிருப்பதாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதால் இப்படம் வெளியான பிறகு எம்மாதிரியான சர்ச்சையை ஏற்படுத்தும் என துல்லியமாக அவதானிக்க இயலவில்லை. இருப்பினும் இப்படம் தமிழ் நிலத்தில் வாழும் மண்ணின் மைந்தர்களுக்கும் வட இந்தியாவிலிருந்து வாழ்வாதாரத்திற்காக இடம்பெயரும் அம்மக்களை பற்றியும் சர்ச்சைக்குரிய பதிவாக இல்லாமல் இருந்தால் ரசிகர்கள் வரவேற்பார்கள் என்று தெரிய வருகிறது.