ஜெனிவாவில் இந்தியாவின் ஆதரவு முக்கியம்!

04.09.2025 08:13:31

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் உள்நாட்டு பொறிமுறையொன்றை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும். ஆனால் அது இலகுவான விடயமல்ல. இதற்கு ஐரோப்பிய மற்றும் கரிபியன் நாடுகளின் நம்பிக்கையை நாம் பெற வேண்டுமெனில் இலங்கை தொடர்பில் இந்தியா அதன் நிலைப்பாட்டை தெளிவாக அறிவிக்க வேண்டும் என பேராசிரியர் பிரதீபா மஹநாமா தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வு கூட்டத் தொடர் இவ்வாரம் ஆரம்பமாகிறது. புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் பதிலளிப்பு தொடர்பில் 47 அங்கத்துவ நாடுகளும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றன. மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் உள்நாட்டு பொறிமுறையொன்றை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும். சர்வதேச ஒத்துழைப்புடன் இலங்கையில் உள்நாட்டு பொறிமுறையை உருவாக்குவது இலகுவான விடயமல்ல.

மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள கால கட்டத்திலேயே இது தொடர்பில் பேசப்படுகிறது. ஆனால் இந்த பொறிமுறை பல ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டிருக்க வேண்டியவையாகும். ஒவ்வொரு கூட்டத் தொடரின் போதும் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படும் பிரேரணைக்கு அமெரிக்கா இணை அனுசரனை வழங்குகிறது. எனினும் தற்போது ட்ரம்ப் அதிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதால் இங்கு இடைவெளி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இம்முறை பிரித்தானியா, கனடா, மலாவி, மொன்டிரிகோ உள்ளிட்ட 5 நாடு;கள் இலங்கைக்கு எதிரான யோசனையை தயாரித்து அதனை ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தரினகராலயத்திடம் கையளித்துள்ளன. இந்த யோசனைக்கு இலங்கையிடம் இணை அனுசரணை கோரப்பட்டுள்ளது. எனினும் இலங்கை அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. இது சிறந்த தீர்மானமாகும். எந்தவொரு நாட்டுக்கும் சுயாதீனமும், இறையான்மைiயும் காணப்படுகிறது.

இதனை எந்த வகையிலும் யாராலும் கேள்விக்குட்படுத்த முடியாது. இதற்கு முன்னர் ஒரேயொரு சந்தர்ப்பத்தில் மாத்திரம் எமக்கெதிரான யோசனைக்கு நாமே இணை அனுசரணை வழங்கியிருக்கின்றோம். இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்களில் பரிந்துரைகள் சில குறிப்பிடப்பட்டுள்ளன. சுயாதீன இராச்சியம் என்ற ரீதியில் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை முன்னிலையாக வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. அவற்றில் பிரதானமானது ரோம் பிரகடனத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதாகும்.

அவ்வாறு அதில் கையெழுத்திட்டால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் நாம் நேரடியாக தொடர்புபடுவோம். எனவே இது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும். அடுத்து நாம் அவதானம் செலுத்த வேண்டிய விடயம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமாகும். இந்த புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது சிறந்த விடயமாகும். ஆனால் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதில் அவதானம் செலுத்த வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையில் இருப்பதால் தான் இந்தோனேசியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுவினரை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த முடிந்துள்ளது.

இந்த சட்டம் நடைமுறையில்லாவிட்டால் இவர்கள் சாதாரண சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பர். இது பொலிஸாரின் விசாரணைகளுக்கு பாரிய பாதிப்பாகவே அமையும். காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் என்பவற்றை ஏற்றுக் கொள்கின்றோம். இதேபோன்று உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் காணப்படுகிறது. இவ்வாறு மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை தேசிய ரீதியில் முன்னெடுக்க வேண்டும்.

அவற்றுக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்ள முடியும். செப்டெம்பர் ஒக்டோபரில் மாத்திரமன்றி தொடர்ந்தும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். பாராளுமன்றத்திலும் இதற்காக விசேட குழு நியமிக்கப்பட வேண்டும்.

சீனா, வியட்நாம், கியூபா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் எமக்கு ஆதரவாகவுள்ளன. ஆனால் ஐரோப்பிய நாடுகள் மற்றும் கரேபியன் நாடுகளின் நம்பிக்கையை நாம் பெற வேண்டும். அதற்கு இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவாக அறிவிக்க வேண்டும். இந்தியா எமக்காக பேசும் பட்சத்தில் எம்மால் இந்த நாடுகளின் ஆதரவை இயல்பாகப் பெற முடியும்.

இந்தியா தவிர தென் ஆபிரிகா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் நம்பிக்கையும் பெற வேண்டும். இந்த நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்பதில்லை. மாறாக இவை இலங்கைக்கு ஆதரவாக தமது வாக்குகளைப் பயன்படுத்தும் பட்சத்தில் எமக்கு அது பெரும் உதவியாக அமையும் என்றார்.