மாணவர்கள் சாலை மறியல்

28.02.2022 09:41:08

சத்தியமங்கலத்தில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 65 ஆண்டுகள் பழமையான இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8 -ம் வகுப்பு வரை 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

 

7 ஆசிரியர்கள் மாணவ - மாணவிகளுக்கு பாடம் கற்பித்து வருகிறார்கள். மாணவர்கள் மதிய உணவை பள்ளி வளாகத்தில் உள்ள ஓடு வைத்துக் கட்டப்பட்டு இருக்கும் கட்டிடத்தில் சாப்பிடுவது வழக்கம. இந்த கட்டிடம் கட்டிய 65 ஆண்டுகள் ஆகிறது.

 

தற்போது அந்த கட்டிடம் சேதம் அடைந்து ஒவ்வொரு நாளும் ஓடுகள் விழுந்து வருகின்றன. இதனால் மாணவ மாணவிகள் அச்சத்துடன் சாப்பிட்டு வந்தனர். இதுகுறித்து பள்ளி சார்பிலும் பெற்றோர்கள் சார்பிலும் சத்தியமங்கலம் நகராட்சியில் பழுதடைந்த கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டித் தரச் சொல்லி மனு கொடுத்திருந்தனர்.

 

ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

 

இதனால் இன்று காலை புதிய கட்டிடம் கட்டி தர வலியுறுத்தி பள்ளியின் முன்பு சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் 8.45 மணிக்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் திடீரென திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

இதன் காரணமாக அந்த பகுதியில் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. தகவல் அறிந்ததும் சத்தியமங்கலம் போலீசார் மற்றும் சத்தியமங்கலம் நகராட்சி ஆணையர் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

 

அப்போது விரைவில் உங்கள் பள்ளியில் சேதமடைந்த கட்டிடத்திற்கு பதில் புதிய கட்டிடம் கட்டித் தரப்படும் என்று உறுதி அளித்தனர். மேலும் பள்ளியில் போதிய அளவு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் உறுதி அளித்தனர். இதனை ஏற்று மாணவர்கள் பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காட்சி அளித்தது.