
கர்நாடகாவில் குறையாத எதிர்ப்பு.
மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் நடித்துள்ளார் கமல்ஹாசன். கமலின் ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று பேசிய கமலின் கருத்துக்கு கர்நாடகாவில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. அம்மாநில முதலமைச்சர் முதல் எதிர் கட்சி தொடங்கி பல்வேறு கன்னட அமைப்புகள் போர் கொடி தூக்கின. |
மேலும் கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரது படங்கள் கர்நாடகாவில் வெளியாகாது என்றும் எச்சரிக்கைகள் விடுத்தன. ஆனால் கமல் திட்டவட்டமாக மன்னிப்பு கேட்கமுடியாது என சொல்லிவிட்டார். இருந்தாலும் அங்கு எதிர்ப்பு குரல்கள் ஓய்ந்தபாடில்லை. கமலுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு உருவபொம்மையும் எரிக்கப்பட்டது. கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, கன்னட அமைப்புகள் கூறிய எச்சரிக்கையை வலியுறுத்தியது. இதனால் தக் லைஃப் படம் கர்நாடாகவில் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் தக் லைஃப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், “கர்நாடகாவில் படம் திரையிடப்படுவதை யாரும் தடுக்காத வகையில் தடை விதிக்க வேண்டும். திரையரங்குகளில் அச்சுறுத்தல்களும் அசம்பாவிதங்களும் ஏற்படாதவாறு அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. |