அவசர நிலக்கரி இறக்குமதியிலும் பாரிய மோசடிக்கு திட்டம்!

13.03.2026 08:25:22

கடந்த 2025 ஆம் ஆண்டு இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான ஏலத்தை பெற்றுக்கொண்ட இந்திய நிறுவனம், உரிய தரத்திலான நிலக்கரியை குறித்த காலத்தில் வழங்கத் தவறியுள்ள நிலையில், மீண்டும் அதே நிறுவனத்திற்கு அவசர ஏலத்தை வழங்குவதற்கும் நிலக்கரி தரக்கட்டுப்பாட்டு விதிகளை மாற்றுவதற்கும் அரசாங்கம் தயாராகி வருவதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட குற்றம் சுமத்தியுள்ளார்.

நுகேகொடையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை (12) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டிற்கான மின்சார உற்பத்திக்குத் தேவையான 25 நிலக்கரி கப்பல்களை இறக்குமதி செய்வதற்கு, 2025 செப்டம்பர் மாதத்தில் ட்ரைடென்ட் கெம்ஃபர் எனும் இந்திய நிறுவனத்திற்கு ஏலம் வழங்கப்பட்டது. இந்த ஏலத்தை வழங்கும் போதே குறித்த நிறுவனத்திற்கு ஏதேனும் விசேட சலுகைகள் வழங்கப்பட்டனவா அல்லது அந்த நிறுவனத்திற்காக ஏல நடைமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாற்றப்பட்டனவா என்ற சந்தேகம் எமக்கு இருந்தது.

நாம் 2025 ஆகஸ்ட் மாதம் முதல் இந்த நிறுவனம் குறித்துக் கூறிவந்த விடயங்கள் தற்போது உண்மையாகியுள்ளன. அந்த நிறுவனம் வழங்கிய நிலக்கரி தரம் குறைந்ததாக இருந்தமையால் நாட்டுக்கு பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளதுடன், அவர்களால் உரிய காலத்தில் நிலக்கரியை வழங்கவும் முடியாமல் போயுள்ளது.

2025 டிசம்பர் இரண்டாவது வாரத்தில் முதலாவது கப்பல் வரும் என்று கூறப்பட்ட போதிலும், அது டிசம்பர் இறுதியிலேயே வந்தது. தற்போது மார்ச் மாதம் பாதியாகியும் 12 கப்பல்களே வந்துள்ளன. கடந்த இரண்டு வாரங்களாக நிலக்கரி கப்பல் வருகை தடைப்பட்டுள்ளது.

இதனால் இலங்கை பாரிய எரிசக்தி நெருக்கடியை எதிர்நோக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, மார்ச் 11 ஆம் திகதி ஐந்து நிலக்கரி கப்பல்களுக்காக அரசாங்கம் அவசர ஏலத்தை கோரியுள்ளது. இந்த ஏலத்திற்காக விண்ணப்பித்துள்ள நான்கு நிறுவனங்களில் மீண்டும் அந்த ட்ரைடென்ட் கெம்ஃபர் நிறுவனமே முன்னிலையில் இருப்பதாகத் தெரியவருகிறது. தரம் குறைந்த நிலக்கரியை வழங்கிய மற்றும் வழங்கல் திறன் அற்ற ஒரு நிறுவனத்திற்கு மீண்டும் ஏலத்தை வழங்குவது நெறியற்றது மாத்திரமன்றி, நாட்டை மீண்டும் ஒரு பாரிய இருளுக்குள் தள்ளும் செயலாகும்.

நிலக்கரியின் தரத்தை தீர்மானிக்கும் போது நிராகரிப்பு அளவு என்ற ஒன்று எப்போதும் இருந்தது. அதாவது ஒரு கிலோ கிராம் நிலக்கரியில் இருந்து 5900 கிலோ கலோரிக்கும் குறைவான சக்தி கிடைத்தால் அல்லது சாம்பல் சதவீதம் 16 வீதத்திற்கு மேல் இருந்தால் அந்த நிலக்கரி நிராகரிக்கப்படும்.

ஆனால், இம்முறை அரசாங்கம் அந்த எல்லையை விடக் குறைந்த தரமுடைய நிலக்கரியை ஏற்றுக்கொண்டுள்ளது. அதுமட்டுமன்றி, தரம் குறைந்த நிலக்கரியை ஏற்றுக்கொள்ளும் வகையில் ஏல நிபந்தனைகளில் இருந்த நிராகரிப்பு அளவு என்ற சொற்பதத்தை குறைந்தபட்ச அளவு என மாற்றியுள்ளனர். இதன் மூலம் நாட்டின் கொள்முதல் விதிமுறைகள் சீர்குலைக்கப்பட்டுள்ளன.

உலகமே போரினால் சூழப்பட்டு எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ள நிலையில், அரசாங்கம் இவ்வாறான முறைகேடுகளைச் செய்து வருகிறது. பாடசாலை வாகனங்கள் மற்றும் அவசர சிகிச்சை ஊர்திகளுக்கு வழங்க வேண்டிய டீசலை மின்சார உற்பத்திக்காகப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். இல்லையெனில் இன்னும் ஒரு மாதத்தில் நாடு இருளில் மூழ்கும்.

டீசலை இறக்குமதி செய்தாலும் மின்சாரக் கட்டணம் மக்களால் தாங்க முடியாத அளவிற்கு உயரும். இந்த அழிவுகளுக்குப் பாதையமைத்த இந்திய நிறுவனமும் அரசாங்க அதிகாரிகளும் சுகபோகமாக உள்ளனர். எதிர்க்கட்சியினர் திருட்டுகளைப் பற்றி விசாரணை செய்வதாகக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் இந்த அரசியல் அதிகாரத்தைத் தமது கைகளில் எடுக்காவிட்டால், அபிவிருத்தி ஒருபுறமிருக்க தற்போதுள்ள வாழ்க்கைத்தரத்தைக் கூடப் பாதுகாத்துக்கொள்ள முடியாமல் போகும் என்றார்.