இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் அமெரிக்க அதிகாரி

10.05.2024 07:51:23

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை செயலர் டொனால்ட் லூ இலங்கக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அமெரிக்காவின் துணை செயலர் டொனால்ட் லூ,  இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கான விஜயத்தை இன்று வெள்ளிக்கிழமை (10) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மேற்கொள்கிறார்.

டொனால்ட் லூவின் 3 நாடுகளுக்கான விஜயமானது ஒவ்வொரு நாட்டுடனும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்பதுடன் சுதந்திரமான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் ஆதரவை நிரூபிக்கும் வகையில் அமையவுள்ளது.

இந்தியாவுக்கு விஜயம் செய்யும் டொனால்ட் லூ, தென்னிந்தியாவில் இருதரப்பு ஈடுபாட்டை மேம்படுத்தும் நோக்கில் சென்னையிலுள்ள துணைத் தூதரக அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.

இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கையுடனான அமெரிக்காவின் பங்களிப்பை ஆழப்படுத்தும் நோக்கில் கொழும்புக்கு வருகைதரும், டொனால்ட் லூ, முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதுடன், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான அமெரிக்காவின் ஆதரவையும், சுதந்திரமான மற்றும் ஜனநாயக சமூகத்தின் அடிப்படை வலுவான சிவில் சமூகத்தின் முக்கியத்துவத்தையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்துவார்.

இலங்கை வியஜத்தின் பின்னர் பங்களாதேஷுக்கு விஜயம் செய்யும் துணை செயலர் டொனால்ட் லூ,  அங்கு அந்நாட்டின் அரச அதிகாரிகள், சிவில் சமூகத் தலைவர்களை சந்திக்கவுள்ளதுடன் காலநிலை நெருக்கடியை நிவர்த்தி செய்வது மற்றும் பொருளாதார உறவுகளை ஆழப்படுத்துவது உட்பட, அமெரிக்க - பங்களாதேஷ் நாடுகளுக்கான ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடவுள்ளார்