
ஐரோப்பிய விமான நிலையங்களில் சைபர் தாக்குதல்.
ஐரோப்பிய விமான நிலையங்களில் நடந்த சைபர் தாக்குதலில் தொடர்புடைய ஒருவர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள West Sussex-ல், ஐரோப்பிய விமான நிலையங்களில் ஏற்பட்ட சைபர் தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். |
இவர் கணினியை தவறாக பயன்படுத்தியதற்கான குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டு, நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என பிரித்தானிய தேசிய குற்றப்பிரிவு (NCA) தெரிவித்துள்ளது. இந்த சைபர் தாக்குதல் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தொடங்கி, வார இறுதிக்குள் பல முக்கிய ஐரோப்பிய விமான நிலையங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. பெர்லின், பிரஸ்ஸல்ஸ் மற்றும் லண்டன் ஹீத்ரோ விமான நிலையங்களில், பயணிகள் பதிவு மற்றும் போர்டிங் செயல்முறைகள் பாதிக்கப்பட்டதால், விமானங்கள் தாமதம் மற்றும் ரத்து செய்யப்பட்டன. சில இடங்களில் ஊழியர்கள் கையால் போர்டிங் பாஸ் எழுதும் நிலைக்கு சென்றனர். இந்த தாக்குதல் Collins Aerospace நிறுவனத்தின் மென்பொருளை குறைவைத்ததாக கூறப்படுகிறது. இந்த அமெரிக்க நிறுவனத்தின் மேம்பொருள் பயணிகள் பதிவு, பாஸ் மற்றும் bag tags அச்சிடுதல் மற்றும் லக்கேஜ்களை அனுப்புதல் போன்ற பணிகளை செய்கிறது. இந்த தாக்குதலுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது இன்னும் தெளிவாகவில்லை. இது ஹேக்கர்கள், குற்றவாளிகள் அல்லது அரசு ஆதரவு கொண்ட குழுக்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். இதில், விமான பாதுகாப்பு மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாடு பாதிக்கப்படவில்லை என ஐரோப்பிய ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. |