இலங்கையில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற குற்றங்களிற்கு பொறுப்புக்கூறும் செயற்பாடுகளிற்கு ஐ.நா மனித உரிமை பேரவை ஆதரவு அளிக்கவேண்டும்

26.02.2021 10:00:00

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதற்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்டன் உதவவேண்டும் என வடக்குகிழக்கு சிவில் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கான கடிதத்தில் சிவில்அமைப்புகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன.

இலங்கையில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற குற்றங்களிற்கு பொறுப்புக்கூறும் செயற்பாடுகளிற்கு ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை ஆதரவு அளிக்கவேண்டும் என நீங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமைக்கு நன்றி தெரிவிப்பதற்காக நாங்கள் இந்தகடிதத்தை எழுதுகின்றோம்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள நகல்வடிவம் இலங்கையை சர்வதேச குற்றவியல்நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டும் என்ற விடயத்தை உள்ளடக்கியிருக்காததை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள்.

இந்த நகல்வடிவில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவற்கான விடயத்தை உள்ளடக்குமாறு முகன்மை நாடுகளிற்கு வேண்டுகோள் விடுக்கவேண்டும் என நாங்கள் உங்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்.

நிலைமையின் பாரதூரதன்மை காரணமாக இலங்கையை சர்வதேச சமூகத்திடம் பாரப்படுத்துமாறு கோரும் கடிதத்தை தமிழர்கள் ஐக்கியப்பட்டு முகன்மை குழுவிற்கு அனுப்பிவைத்தனர்.

வடக்குகிழக்கு சிவில் சமூகத்தினர் இணைந்துமுன்னெடுத்த பொலிகண்டி முதல் பொத்துவில் முதல் பேரணியில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கானவர்கள் இந்த கோரிக்கையை உறுதி செய்துள்ளனர்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த தவறினால் அது குற்றங்களில் ஈடுபட்டவர்கள் நீதியின் பிடியிலிருந்து தப்புவதற்கு வழிவகுக்கும்.

தாங்கள் நீதியை எதிர்கொள்ளவேண்டிய நிலையேற்படாது என்ற எண்ணத்தில் பாதுகாப்பு படை தலைவர்கள் மற்றும் இலங்கை அரசியல் தலைவர்கள் தயக்கமின்றி தமிழ் மக்களிற்கு எதிரான அநீதிகளில் ஈடுபடும் நிலை உருவாகும்.