தமிழ் பொது வேட்பாளர் என்ற மூலோபாயம் பயனற்றது
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் என்ற மூலோபாயம் பயனற்றது எனவும் தென்னிலங்கையில் உள்ள தலைவர்களுடன் பேச்சுக்களை முன்னெடுத்தே இறுதியான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் எனவும் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு கொழும்பிலுள்ள ஆர்.சம்பந்தனின் இல்லத்தில் அவரைச் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வழங்கி வருகின்ற ஆணையைத் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் நிராகரித்து வருகின்ற நிலையில் தேர்தல்களை நடத்தப்படுவதற்கு அப்பால் தமிழ் மக்களின் ஆணையை ஏற்றுக்கொள்வதற்கான அழுத்தங்களையும் பிரயோகிக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
அதன்படி, தமிழ் மக்கள் தொடர்ச்சியாக தமது நீண்டகால அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை அடிப்படையாக் கொண்டே ஒவ்வொரு தேர்தல்களிலும் ஆணையை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும் அவர்கள் வழங்கி வரும் ஆணையைக் கருத்தில் கொள்ளாது கருமங்களை முன்னெடுக்கின்ற செயற்பாடுகளே நடைபெறுவதாகவும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, ஐரோப்பிய ஒன்றியக்குழு உட்படச் சர்வதேச சமூகம் தேர்தல்களை நடத்துவதற்கான அழுத்தங்களை கொடுப்பதற்கு அப்பால் தமிழ் மக்கள் வழங்கும் ஆணையை உறுதிப்படுத்துமாறு அழுத்தங்களை அதியுச்சமாகப் பிரயோகிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்திள்ளார்.
அத்தோடு, இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் செய்து கொண்ட உடன்பாடுகளையோ, சர்வதேசத்துடன் செய்து கொண்ட உடன்பாடுகளையோ ஏற்று நடைமுறைப்படுத்துவதாக இல்லை எனவும் சம்பந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அரசியலமைப்பில் உள்ள விடயங்களைக் கூட அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதில் தொடர்ச்சியாக தயக்கம் காட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழ் மக்கள் உள்ளக சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் எனவும் ஆகவே அந்த உரித்து தொடர்ச்சியாக மறுக்கப்படுகின்றபோது நிச்சயமாக வெளியக சுயநிர்ணய உரித்தை கோருவதற்கான நிலைமைகளே உருவாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களின் வரலாற்றில் பொதுவேட்பாளர் போன்ற விடயங்களை எப்போதுமே முன்னிறுத்தியது கிடையாது எனவும் அவ்விதமான நிலையில் தற்போது பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது பொருத்தமற்ற அணுகுமுறையாகவே இருக்கும் எனவும் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.