பரீட்சை முறைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

13.09.2023 12:54:42

நாட்டின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு ஏற்ற வகையில், தேசிய கல்விக் கொள்கையொன்றை உருவாக்க வேண்டும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, நாட்டில் மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளதாகத் தெரிவித்தார்.

ஐந்தாம் தர புலமைப்பிரிசில் பரீட்சை, ஆரம்பத்திலேயே ஒரு போட்டித் தன்மையை ஏற்படுத்துவதாகவும் இந்தப் போட்டியால் குழந்தைகளிடையே வெறுப்பும், கோபமும் எழுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளிலும் போட்டி நிலவுவதாகத் தெரிவித்த அமைச்சர், போட்டித் தன்மையைக் கொண்ட கல்வி முறை இருக்கும் வரை, நாட்டிற்காக ஒரு தன்னலமற்ற சமூகத்தை உருவாக்குவது கடினம் எனத் தெரிவித்தார்.

பிள்ளைகளுக்கு ஓய்வுடன் கூடிய மனநிலை இருக்கவில்லை என்றால், அறிவைப் புரிந்துகொள்வது கடினம் என்றும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.

போட்டியின் பின்னர் பல்கலைக்கழகங்களுக்குள் பிரவேசிக்கும் பெரும்பாலான மாணவர்கள், மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அமைச்சர், இந்தக் காரணங்களுக்காக, பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படும் முன்னுரிமையை முன்பள்ளி மேம்பாட்டுக்கும் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், கடந்த காலத்தில் கல்வி முறையில் ஏற்பட்ட தவறுகள் எதிர்காலத்தில் நடபெறாமல் இருக்க பல்வேறு ஆலோசனைகளை முன்வைத்துள்ளோம் என்றும் 10 ஆம் வகுப்பில் சாதாரண தரப் பரீட்சையையும், 12ஆம் வகுப்பில் உயர்தரப் பரீட்சையை நடத்துவது குறித்தும் பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள இலவசக் கல்வி முறை தொடர்பில் விரிவான கருத்தாடல் ஒன்று அவசியம் என்றும் இதன்போது அமைச்சர் தெரிவித்தார்.

அத்தோடு, நாட்டு மக்களையும் உள்ளடக்கிய தேசிய அரச கொள்கையொன்றை தயாரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றும் நாடாளுமன்றில் சட்டமொன்றை நிறைவேற்றுவதன் மூலமே இந்தக் கொள்கை தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.