கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

23.10.2021 05:48:45

வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு சார் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் ‘புலி’ வந்ததால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு சார் ஆலோசனைக்குழுக் கூட்டம் அமைச்சர் சி.பி ரத்நாயக்க தலைமையில் நடைபெற்றது.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சி.சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இக்கூட்டத்தில் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல்படி விடயங்கள் முன்னெடுக்கப்படாமல் வேறு விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டு விவாதிக்கப்பட்டிக்கொண்டிருந்தன. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சருக்குச் சுட்டிக்காட்டியபோதும் அது கவனத்தில் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரான சிறிதரன், கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற காணி அபகரிப்பு மற்றும் கிளிநொச்சியில் ஆனைவிழுந்தான், ஜெயபுரம் பகுதிகளின் ஆக்கிரமிப்புகள் தொடர்பில் குழுவின் கவனத்துக்குக் கொண்டுவந்த போது அரச தரப்பின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மாயாதுன்ன சிந்தக அமல், சிறிதரனைப் பார்த்து “புலி…. புலி” எனச் கூச்சலிட்டு அவரின் கருத்துக்கு இடையூறுகளை ஏற்படுத்தினார்.

இந்த புலிக்கூச்சலுக்குக் கடுமையான எதிர்ப்பை வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், “நாங்கள் புலிகள் என்றால் எங்களை ஏன் கூட்டத்துக்கு அழைத்தீர்கள். எமது மாகாணத்தின், மாவட்டத்தின், மக்களின் பிரச்சினைகளைப் பேசினால் “புலி” எனக் கத்தும் உங்களிடம் நாம் எவ்வாறு நியாயத்தை எதிர்பார்க்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பிவிட்டு, “இந்தக் கூட்டத்தில் இனி நாம் பங்கேற்கமாட்டோம்” எனக் கூறி வெளிநடப்புச் செய்தனர்.

இதன்போது அரசின் பங்காளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சந்திம வீரக்கொடி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியமையுடன், அவர்கள் தமது மக்கள் தொடர்பில் பேசுவதற்கு உரிமை உண்டு எனச் சுட்டிக்காட்டினர். எனினும், விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் மற்றும் கூட்டத்தில் பங்கேற்ற ஏனைய உறுப்பினர்கள் மௌனம் சாதித்தனர்.