வாக்குமூலம் அளிக்க மைத்திரிக்கு அழைப்பு

25.03.2024 08:05:14

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் அளிக்க வருமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அதற்கு அவர் ஓர் சாதகமான பதிலை வழங்கியதாகவும் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கை ஊடகங்களில் வெளியானதையடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வழங்கிய அறிவித்தலின் பிரகாரம், இது தொடர்பில் உடனடி விசாரணை நடத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் உத்தரவிட்டுள்ளார் எனவும்  இது தொடர்பான அறிக்கையை 48 மணித்தியாலங்களுக்குள் முன்னாள் ஜனாதிபதி வழங்குவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (24) அஸ்கிரிய பீட பிரதிப் பதிவாளர் நாரங்கபானவே ஆனந்த தேரரின் ஆசிகளைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரையாற்றிய பொலிஸ்மா அதிபர்,

முன்னாள் ஜனாதிபதியின் அறிக்கையின் பிரகாரம் குற்றப் புலனாய்வு திணைக்களம் மேலதிக விசாரணைகளை ஆரம்பிக்கும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறித்த அறிக்கையின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சருடன் கலந்தாலோசித்து அவரது பாதுகாப்பு தொடர்பில் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஊடகங்களினூடாக வெளியிட்ட அறிக்கையைப் பார்த்து அவரைக் கைது செய்யுமாறு சிலர் முன்வைக்கும் கோரிக்கைகளில் எவ்வித அடிப்படையும் இல்லை.

மைத்திரிபால சிறிசேனவின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும், எதிர்காலத்தில் கைது செய்யப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டால், அவ்வாறானதொரு தீர்மானத்தை அப்போதே எடுக்க முடியும் எனவும் 

ஊடகங்களில் ஒருவரின் அறிக்கையைப் பார்த்து, அந்த நபரைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கருத்தில் கொண்டு, மக்களைக் கைது செய்ய வாய்ப்பில்லை என்றும் சட்டம் பற்றிய புரிதல் இல்லாதவர்களால் இப்படிப் பேசப்படுகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிக்கையை சாதகமாகப் பார்க்க வேண்டும் எனவும், குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் குறித்த உண்மைத்  தகவல்கள் தெரிந்தால் விசாரணை நடத்தி உரியவர்களைக் கைது செய்ய முடியும் எனவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தற்போது வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி நீதிமன்றத்திற்கும் சட்டமா அதிபருக்கும் அறிவித்து உரிய நடவடிக்கை எடுப்பார்.

மேலும் அவர் கூறினார்.

இந்நிகழ்வில் மத்திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த திஸாநாயக்க, கண்டி பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.