ஹவுஸ் நம்பர் 47 படத்தை விமர்சித்த புளூசட்டை மாறன்!
நடிகர் வெங்கடேஷ் மற்றும் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இருவரும் முதன்முறையாக இணைந்து வெளிவந்துள்ள படம் ஆதர்ஷ குடும்பம் ஹவுஸ் நம்பர் 47 . இப்படத்தில் வெங்கடேஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, நாரா ரோஹித், நிவேதா பெத்துராஜ் மற்றும் ராவ் ரமேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் இப்படம் குறித்து பிரபல திரைப்பட விமர்சகரும் யூடியூபருமான புளூசட்டை மாறன் தனது விமர்சனத்தை பகிர்ந்துள்ளார். படத்தின் அடிப்படையான கதைக்கரு சுவாரஸ்யமாக இருந்தாலும், அதை திரைக்கதையாக மாற்றிய விதம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என அவர் விமர்சித்துள்ளார்.
படத்தின் தொடக்கத்தில் கொடூரமான கொள்ளைக் கும்பல் ஒன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. பணக்கார குடும்பங்களை குறிவைக்கும் அந்த கும்பல், நேரடியாக வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடிப்பதில்லை. அதற்குப் பதிலாக வீட்டு வேலை செய்பவர், டிரைவர் அல்லது தோட்டக்காரர் போன்ற வேடங்களில் சம்பந்தப்பட்ட வீடுகளில் வேலைக்குச் சேர்கின்றனர். அந்த வீட்டில் அதிகளவில் பணம் இருக்கும் சந்தர்ப்பத்தை தெரிந்துகொண்டு, சரியான நேரத்தில் கொள்ளையை அரங்கேற்றுவதோடு வீட்டில் இருப்பவர்களையும் கொலை செய்கின்றனர். தொடர்ந்து நடைபெறும் இந்தச் சம்பவங்கள் காவல்துறைக்கு பெரும் சவாலாக மாறுகின்றன. கொள்ளைக் கும்பலின் செயல்பாடுகளில் இருக்கும் ஒற்றுமையை கண்டுபிடிக்கும் போலீசார், பணக்கார குடும்பங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.
இந்த சூழலில் வெங்கடேஷின் குடும்பம் கதைக்குள் வருகிறது. மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழும் அவர், கடன் பிரச்சனைகளால் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட சூழலில் அவரது வாழ்க்கையையே மாற்றும் வகையில் லாட்டரியில் ரூ.100 கோடி பரிசு கிடைக்கிறது. இந்தத் தகவல் கொள்ளைக் கும்பலின் கவனத்திற்கும் செல்கிறது. அதன்பிறகு வெங்கடேஷின் குடும்பத்திற்கு என்ன நடக்கிறது, அந்த கும்பலின் திட்டம் என்ன என்பதையே மீதிக்கதை விவரிக்கிறது.