அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு ஏற்பட்டிருந்த தோல் புற்றுநோய் பாதிப்பு அகற்றம்

04.03.2023 21:19:26

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக கடந்த 2021-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார் ஜோ பைடன். 80 வயதான ஜோ பைடன் அடுத்த ஆண்டு (2024) நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். எனினும் இன்னும் அதை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதனிடையே ஜோ பைடனின் வயது மற்றும் அவரது உடல்நிலையை காரணம் காட்டி அவர் மீண்டும் ஜனாதிபதியாக தகுதியுடன் உள்ளாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் ஜோ பைடனுக்கு மார்பு பகுதியில் தோல் புற்றுநோய் ஏற்பட்டிருந்ததாகவும், அது கடந்த மாதம் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாகவும் ஜோ பைடனின் டாக்டர் கெவின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "ஜோ பைடனுக்கு மேற்கொள்ளப்பட்ட தொடர் சிகிச்சை காரணமாக புண் போன்று மார்பில் உருவாகியிருந்த புற்றுநோய் திசுக்கள் முற்றிலும் அழிக்கப்பட்டது. புற்றுநோய் திசுக்களால் மார்பில் இருந்த காயமும் முழுவதுமாக குணமடைந்துள்ளது. இவை ஆரம்பகட்ட புற்றுநோய் திசுக்கள் என்பதால், தொடர் சிகிச்சையால் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு இனி புற்று நோய் சிகிச்சை தேவைப்படாது" என்றார்.