ஐ.நா COP30 காலநிலை உச்சி மாநாட்டில் தீ விபத்து!

21.11.2025 16:18:00

ஐ.நா காலநிலை உச்சி மாநாடு நடைபெறும் இடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரேசிலின் பெலெமில் உள்ள ஐக்கிய நாடுகளின் COP30 காலநிலை உச்சி மாநாடு நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்றிருந்த நிலையில், அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக செயல்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

COP30 காலநிலை உச்சி மாநாடு நடைபெறும் இடத்தில் இந்தியாவின் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் உட்பட இந்திய குழுவில் சுமார் 20 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தீ விபத்து தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருப்பதாகவும், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பிரேசில் அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த திடீர் தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை எனினும் மின்கசிவு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.

COP30 காலநிலை உச்சி மாநாட்டில் காலநிலை மாற்றத்தை சமாளிப்பதில் எவ்வாறு முன்னேற்றம் அடைவது என்பது குறித்து கிட்டத்தட்ட 200 நாடுகள் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், விபத்துக்கான காரணம் விரைவில் கண்டறியப்படும் என அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.