அடுத்த மூன்று மாதங்களுக்கு நீர் வெட்டுக்கு வாய்ப்பில்லை.
எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மழை வீழ்ச்சி கிடைக்கப்பெறாவிட்டாலும், லபுமக மற்றும் களத்துவாவி நீர்த்தேக்கங்களில் தற்போது காணப்படும் நீர் மட்டம் தடையற்ற நீர் விநியோகத்தை மேற்கொள்வதற்கு போதுமானதாக உள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
எல் நினோ நிலைமை காரணமாக எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் எதிர்பார்த்ததை விட வறண்ட காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் நிபுணர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நீர் கொள்ளளவை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு போதுமான அளவு நீர் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை நீர் வெட்டை அமுல்படுத்துவது தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரிவித்த அமைச்சர், குறைந்தது எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு நீர் விநியோகத்தில் எந்தவித ஆபத்தும் ஏற்படாது என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எனினும், காலநிலை மற்றும் நீர்த்தேக்கங்களின் நிலைமையில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதால், நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.