
மோதியின் உக்ரைன் பயணம் குறித்த ஊகங்கள்
பிரதமர் நரேந்திர மோதி ஆகஸ்ட் மாதம் உக்ரைனுக்கு மேற்கொள்ளும் பயணத்தின் போது ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மத்தியஸ்தம் செய்ய வாய்ப்பிருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இந்திய நாடாளுமன்றத்துடன் தொடர்புடைய ஒரு வட்டாரம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோதி உக்ரைன் செல்லக்கூடும் என்று தூதரக வட்டாரங்களை குறிப்பிட்டு இந்திய ஊடகங்களில் வெளியான செய்தியை ரஷ்ய அரசின் தொலைக்காட்சி சேனல் ஆர்டி (RT) மேற்கோள் காட்டியுள்ளது.
“உக்ரைன் பிரச்சனையில் இந்தியா மத்தியஸ்தம் செய்ய வாய்ப்புள்ளது. பிரதமர் மோதியின் உக்ரைன் பயணத்தின் போது இது நடக்கலாம். இது இன்னும் பரிசீலனையில் உள்ளது” என்று இந்திய பிரதமரின் உக்ரைன் பயண வாய்ப்புகள் குறித்த தகவலை வழங்கியவர்கள் கூறுவதாக டாஸ் குறிப்பிடப்பட்டுள்ளது.
“ரஷ்யாவுடன் இந்தியா நீண்டகாலமாக நட்புறவை கொண்டுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனும் பிரதமர் நரேந்திர மோதி நல்லுறவைக் கொண்டுள்ளார். உக்ரைனும் இந்தியாவுடன் நல்லுறவைக் கொண்டுள்ளது. இரு நாடுகளும் இந்தியா மீது நம்பிக்கை வைத்துள்ளன.”
"ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர உதவ முடியும் என்று இந்தியா பலமுறை கூறியுள்ளது. இருப்பினும், இரு தரப்பும் ஒப்புக்கொண்டால் மட்டுமே மத்தியஸ்தம் செய்ய முடியும். உக்ரைன் எதிர்கொண்டு வரும் நெருக்கடியை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும்" என்று தகவலை வழங்கியவர்கள் டாஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர்.
பிரதமர் மோதியின் உக்ரைன் பயணம் ஆகஸ்ட் மாதம் நிகழலாம் என டாஸ் செய்தி குறிப்பிடுகிறது.
இது இந்திய ஊடகமான WION-ன் செய்தியை மேற்கோள் காட்டியுள்ளது. அதில் "இந்திய பிரதமர் அநேகமாக ஆகஸ்ட் 23 அன்று உக்ரைனுக்கு செல்வார்" என்று தகவலை வழங்கியவர்களை மேற்கொள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ரஷ்ய அரசின் ஊடகமான 'ஆர்டி (RT) ’, இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகளை மேற்கோள் காட்டி, ஆகஸ்ட் மாதம் உக்ரைன் தலைநகர் கீவ் செல்ல மோதி திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது.
ஆர்டி இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியில், ''மோதி ஆகஸ்ட் 23ஆம் தேதி கீவ்வை அடையலாம். ஜூலை மாதம், இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உக்ரைனிய அதிகாரிகளுடன் தொலைபேசியில் பேசினர்''' என்று இந்திய ஊடகங்களில் வந்த செய்தியை மேற்கொள்காட்டியுள்ளது.
''மோதி ரஷ்யாவுக்கு சென்றது ரஷ்யாவைத் தனிமைப்படுத்தும் முயற்சிகளுக்குப் பலத்த அடியாக அமைந்தது. மேலும் மோதியின் ரஷ்ய பயணத்தால் அமெரிக்கா எரிச்சலடைந்துள்ளது என கூறப்படுகிறது'' என ஆர்டி செய்தியில் எழுதியுள்ளனர்.
சர்வதேச செய்தி முகமையான ராய்ட்டர்ஸ், ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோதி உக்ரைன் பயணம் மேற்கொள்ள உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும், டெல்லியில் உள்ள உக்ரைன் தூதரகம் இந்த தகவலை ராய்ட்டர்ஸிடம் உறுதிப்படுத்தவில்லை. இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து இதுவரை எந்த செய்தியும் வெளியாகவில்லை என்று ராய்ட்டர்ஸ் கூறியுள்ளது.
ஆகஸ்ட் மாதம் திட்டமிடப்பட்டதாக கூறப்படும் மோதியின் உக்ரைன் பயணம் குறித்து, வெளியுறவு விவகார மற்றும் புவிசார் உத்தி நிபுணர் பிரம்மா செல்லனே, தன் எக்ஸ் பக்கத்தில் "மோதி உக்ரைன் செல்வதன் மூலம் என்ன சாதிக்க விரும்புகிறார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவர் போர் நிறுத்தத்தை விரும்பினால், அதனை செயல்படுத்த அமெரிக்கா தேவை. போர் நிறுத்த முயற்சிகள் வேகம் பெறுமா இல்லையா என்பதை அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும்." என்று பதிவிட்டுள்ளார்.
பாஜக உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி தன் எக்ஸ் பக்கத்தில், "உக்ரைனில் மோதியின் முயற்சிகள் வரவேற்கத்தக்க செயலாக பார்க்கப்படுகிறது. ஆனால் இது அமெரிக்க அதிபரின் அழுத்தத்தால் நடக்கிறது. ஆனால், பஞ்ச தந்திர கதைகளில் வரும் வௌவால்களின் நிலையில் இருந்து மோதி பாடம் கற்க வேண்டும். அது- இரு பக்கங்களில் இருந்தும் விளையாட கூடாது அல்லது வௌவால்களுக்கு ஏற்பட்ட மேசமான நிலைமையை அனுபவிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னாள் இந்திய தூதர் அசோக் சஜ்ஜன்ஹர் தன் எக்ஸ் பக்கத்தில், "பிரதமர் மோதியின் வழக்கத்திற்கு மாறான ஆகஸ்ட் மாத உக்ரைன் பயணத்தை நான் வரவேற்கிறேன். உலக அளவில் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் செல்வாக்கு என்ன என்பதற்கு இதுவே சான்று. இந்த முடிவு இந்தியாவின் உத்தியில் உள்ள சுயாட்சி மற்றும் பலதரப்பு உறவுகளை மேம்படுத்தும் கொள்கையை பிரதிபலிக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
'தி இந்து' பத்திரிகையின் வெளியுறவுக் கொள்கை விவகார ஆசிரியர் சுஹாசினி ஹைதர், "மோதி உக்ரைன் சென்றால், போர் தொடங்கியதற்கு பிறகு ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் செல்லும் ஒரு சில தலைவர்களில் அவரும் ஒருவராக இருப்பார். போருக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் பயணம் செய்த மற்ற நாடுகளின் தலைவர்களில் கினி-பிசாவ், ஹங்கேரி, இந்தோனீசியா, தென்னாப்பிரிக்கா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்களும் அடங்குவர்." என்கிறார்.
இதற்கு முன்பும் மோதியும் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கியும் சந்தித்துள்ளனர்
பிப்ரவரி 2022இல் ரஷ்யா-உக்ரைன் போர் வெடித்த பிறகு, பிரதமர் மோதி இத்தாலி மற்றும் ஜெர்மனியில் நடந்த ஜி-7 மாநாடுகளின் போது ஜெலென்ஸ்கியை சந்தித்தார். ஆனால் அவர் இதுவரை உக்ரைக்கு செல்லவில்லை.
கடந்த மாதம் இத்தாலியில் ஜெலென்ஸ்கியை சந்தித்தபோது, உக்ரைன் நெருக்கடிக்கு அமைதியான தீர்வு காண இந்தியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று மோதி கூறியிருந்தார்.
இந்த மாத தொடக்கத்தில், ரஷ்ய பயணத்தின் போது ரஷ்ய அதிபர் புதினை மோதி சந்தித்தார். சந்திப்புக்குப் பிறகு, புதினுடனான தனது உரையாடலில் பல 'சுவாரஸ்யமான புதிய யோசனைகள்' வெளிவந்ததாக மோதி கூறினார்.
ஆனால், ''உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தின் தலைவர், உலகின் மிகவும் பயங்கரமான குற்றவாளியை அரவணைத்துச் செல்வதைப் பார்ப்பது ஏமாற்றம் அளிக்கிறது'' ஜெலென்ஸ்கி வ் கூறினார். இது அமைதி முயற்சியில் விழுந்த பேரிடியாகும்.
டெல்லியில் உள்ள உக்ரைன் தூதரை இந்திய அரசு அழைத்து இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.
பிரதமர் மோதியின் ரஷ்யப் பயணம் புதினுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளின் விளைவை பலவீனப்படுத்தியதாக மேற்கத்திய ஊடகங்கள் கூறின.
உக்ரைன் மீதான தாக்குதலுக்குப் பிறகு ரஷ்யாவைத் தனிமைப்படுத்த மேற்கத்திய நாடுகள் முயற்சிக்கிறது ஆனால் இந்தியா அவர்களின் கொள்கைகளுடன் கைகோர்த்து நிற்கவில்லை.
மோதியின் ரஷ்யப் பயணம் வெற்றிகரமாக நிகழ்ந்தது என இந்தியா கூறியிருந்தது.
ஆனால் மோதியின் ரஷ்யப் பயணம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை கவலை தெரிவித்திருந்தது. உக்ரைன் போரை நிறுத்துவதற்கான நியாயமான அமைதிக்கான முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று நம்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராக பதவியேற்ற மோதியின் முதல் ரஷ்யா பயணம் இதுவாகும்.
மோதி ரஷ்யா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, மேற்கத்திய நாடுகளின் ராணுவக் கூட்டணியான நேட்டோ கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அமெரிக்காவில் நடைபெற்ற இந்த நேட்டோ கூட்டத்தில், உக்ரைனுக்கான ஒத்துழைப்பு மற்றும் நேட்டோவில் உக்ரைனை சேர்ப்பது ஆகியவை முக்கிய விவாதமாக இருந்தது.
பாதுகாப்பு மற்றும் இதர தேவைகளுக்கு மேற்கத்திய நாடுகளை முழுமையாக சார்ந்திருக்க முடியாது என்பதை மேற்கத்திய நாடுகளுக்கு உணர்த்தும் வகையில் மோதியின் ரஷ்ய பயணம் அமைந்திருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
கடந்த ஆண்டு, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசப் பொரெல் தெரிவித்த கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்திருந்தார். “ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குகிறது, இது சகஜமாக செயல்பாடுதான்” என்று தெளிவுபடுத்தியிருந்தார்.