ஆபிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டின் பிரதமர் ஜேர்மனியில் மரணம்: ஜனாதிபதி அலசேன் குவாட்டாரா இரங்கல்!
ஆபிரிக்க நாடான ஐவரி கோஸ்ட் நாட்டின் பிரதமர் ஹமேட் பக்காயோகோ மறைவுக்கு ஜனாதிபதி அலசேன் குவாட்டாரா இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தனது இரங்கல் செய்தியில், ‘ஹமேட் பக்காயோகோ மிகச்சிறந்த அரசியல்வாதி, இளைஞர்களுக்கு உதாரணமாக திகழ்ந்தார். முன்மாதிரியான விசுவாசமுள்ள மனிதர்’ என புகழாரம் சூட்டியுள்ளார்.
அமடோ கோன் கூலிபாலியின் திடீர் மரணத்தை தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் 8ஆம் திகதி பிரதமராக பதவியேற்ற 56வயதான ஹமேட் பக்காயோகோ, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் ஜேர்மனியில் பிரெய்பர்க் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று முன்தினம் (புதன்கிழமை) உயிரிழந்தார்.
மறைந்த ஹமேட் பக்காயோகோ பத்திரிகை நிர்வாகியாக இருந்து, அரசியலில் குதித்து, அந்த நாட்டின் பிரதமராக உயர்ந்தவர்.
பிரதமர் பதவியுடன் அந்த நாட்டின் இராணுவ அமைச்சர் பொறுப்பையும் ஹமேட் பக்காயோகோ வகித்து வந்தார்.