சமந்தா பற்றிய வதந்தி : மானேஜர் மறுப்பு

14.12.2021 09:33:37

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. சில தினங்களுக்கு முன்பு திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்தார். பின்னர் கடப்பாவில் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்கு முன்பு அங்குள்ள அமீன் பீர் தர்காவிற்கும் சென்றார்.

நேற்று சமந்தா ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காகச் சென்றுள்ளார். ஆனால், அது பற்றி பரபரப்பான வதந்தியை தெலுங்கு மீடியாக்கள் வெளியிட்டன. சமந்தா கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, சமந்தா பற்றி வதந்திக்கு அவரது மானேஜர் மறுப்பு தெரிவித்துள்ளார். “லேசான இருமல் இருந்ததால் அவர் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொண்டார். தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவரைப் பற்றிய சமூக வலைத்தள வதந்திகளை நம்ப வேண்டாம்,” என கேட்டுக் கொண்டுள்ளார்.

சமீபத்தில் நடந்த 'புஷ்பா' பட விழாவில் கூட சமந்தா கலந்து கொள்ளவில்லை. அந்தப் படத்தில் அவர் ஒரு பாடலுக்கு மட்டும் கிளாமர் நடனம் ஆடியுள்ளார். அப்பாடலுக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.