சிம்பு படங்களுக்கு வந்த சிக்கல்

04.08.2021 11:09:13

வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' படத்தில் நடித்து முடித்த பிறகு கவுதம் மேனன் இயக்கும் 'நதிகளிலே நீராடும் சூரியன்' படத்திலும், அதற்கடுத்து 'பத்து தல' படத்திலும் சிம்பு நடிக்க இருக்கிறார். இதில் கவுதம் மேனன் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 6 முதல் ஆரம்பமாக இருந்ததாம். ஆனால், அதை ஆரம்பிக்க முடியாத அளவிற்கு சிக்கல் வந்துள்ளது.

சிம்பு நடித்த “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தைத் தயாரித்ததன் மூலம் தனக்கு ஏற்பட்ட சுமார் 20 கோடி நஷ்டத்திற்காக அதன் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் எப்போதோ புகார் அளித்திருந்தார். இதற்கு முன்பு நடைபெற்ற சில பேச்சு வார்த்தைகளில் சுமூக முடிவு எட்டப்படவில்லை.

அதையும் மீறி சிம்புவும் சில படங்களில் நடித்து முடித்துவிட்டார். ஆனால், மைக்கேல் ராயப்பன் மட்டுமல்லாது மேலும் சில தயாரிப்பாளர்கள், சிம்பு தங்களிடம் வாங்கிய அட்வான்ஸ் தொகைக்காகத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர். ஒட்டு மொத்தமாக அனைத்து பிரச்சினைகளுக்காகவும் சிம்பு தரப்புடன் தயாரிப்பாளர் சங்கத்தினர் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். நேற்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர் கலந்து கொண்டாராம். அனைத்தையும் கேட்டுக் கொண்ட அவர் பின்னர் அது குறித்து சிம்புவிடம் பேசிவிட்டு முடிவைச் சொல்வதாக சொன்னதாகவும் தகவல்.

இந்த விவகாரம் தீரும் வரை சிம்பு நடிக்கும் புதிய படங்களின் படப்பிடிப்பை நடத்த சிக்கல் இருக்கும் என கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.