சீன அரசின் அடக்குமுறை: கணவரை தேடும் மனைவி
மூன்று ஆண்டுகளாக கணவரை தேடி வரும் மனைவி சீன அரசின் அடக்குமுறையால் தனக்கு நேர்ந்த பாதிப்பு குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சீனாவில் பொது பாதுகாப்பு துறை இணையமைச்சராக இருந்தவர் மெங் ஹாங்வேய். இவரை 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீஸ் பிரிவின் தலைவராக சீன அரசு நியமித்து பிரான்சுக்கு அனுப்பியது.மனைவி கிரேஸ், இரு குழந்தைகளுடன் மெங் பிரான்சில் குடியேறினார். 2018ல் முக்கிய விஷயமாக சீனா செல்வதாக கூறிச் சென்ற மெங் அதன் பின் மாயமானார். அவர் எங்கிருக்கிறார் என்ற விபரம் தெரியாமல் கிரேஸ் சீன அரசை தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கிய மெங் இன்டர்போல் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தலைமறைவாகி விட்டதாக சீன அரசு தரப்பில் கூறப்பட்டது.இதை நம்ப மறுத்த கிரேஸ் சீன அரசுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக மெங் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போதிலிருந்து அவருக்கு கொலை மிரட்டல்கள் வரத் துவங்கியுள்ளன. அத்துடன் தன் பிள்ளைகளை கடத்த முயற்சி நடப்பதை அறிந்த கிரேஸ் பிரான்ஸ் அரசிடம் விண்ணப்பித்து அரசியல் அகதி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.
தற்போது கிரேஸ் வீட்டில் ஆயுதமேந்திய போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.கடந்த ஆண்டு லஞ்ச ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட மெங் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் அவருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சீன அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மெங் எங்கு சிறை வைக்கப்பட்டுள்ளார் என்ற விபரத்தை சீன அரசு தெரிவிக்காமல் உள்ளது.
மெங் உயிருடன் இருக்கிறாரா என்ற சந்தேகம் உள்ளதாக கூறும் கிரேஸ் அதற்கான பதிலை சீனா தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.