ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின் 'அரண்மனை 4'
வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படங்களின் அடுத்த பாகம் எப்போது வெளியாகும்? என்பது ரசிகர்களின் கேள்வியாக இருக்கும்.
தமிழில் இதுவரை வெற்றி பெற்ற படங்களின் மூன்று பாகங்கள் தொடர்ச்சியாக தயாராகி, பட மாளிகையில் வெளியாகி வெற்றியும் பெற்றிருக்கிறது. 'அரண்மனை' எனும் காமெடி ஹாரர் திரில்லர் ஜேனரில் வெளியான திரைப்படத்திற்கு, ரசிகர்கள் தந்த பேராதரவால் மூன்று பாகங்களாக வெளியாகி வெற்றியை பெற்றன.
தற்போது நான்காவது பாகம் தயாராகி இருக்கிறது. இதன் மூலம் தமிழ் திரையுலகில் நான்காம் பாகமாக வெளியாகும் முதல் திரைப்படம் என்ற சாதனையை 'அரண்மனை 4' திரைப்படம் படைத்திருக்கிறது.
இயக்குநரும், நடிகருமான சுந்தர். சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'அரண்மனை 4' திரைப்படத்தில் சுந்தர். சி, தமன்னா, ராசி கண்ணா, சந்தோஷ் பிரதாப், ராமச்சந்திர ராஜு, கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ் டெல்லி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஈ. கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிப் ஹொப் ஆதி தமிழா இசையமைத்திருக்கிறார். காமெடி ஹாரர் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏசிஎஸ் அருண்குமார் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் நடிகை குஷ்பூ வழங்குகிறார்.
இந்தத் திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு காத்திருந்தது. இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் இத் திரைப்படம் படமாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் அறிவித்திருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் ஆவி, பேய் என்றால்.. ரசிகர்களுக்கு பயம் எனும் உணர்வு ஏற்படும். அதன் பிறகு ' காஞ்சனா' திரைப்படத்தின் மூலம் ஆவி, பேய், அமானுஷ்யம் என்றால் விழுந்து விழுந்து சிரிக்கும் நிலை உருவானது. இதனைத் தொடர்ந்து சுந்தர் சி யின் 'அரண்மனை' திரைப்படம் காமெடி வித் ஹாரர் ஜேனரில் வெளியாகி, ரசிகர்களை கவர்ந்தது. தற்போது அரண்மனை படத்தின் நான்காம் பாகம் தயாராகி வெளியாகவிருக்கிறது. இதற்கும் ரசிகர்களின் பேராதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.