
கபில் சர்மா ஷோவில் கலந்துகொள்ளும் ஆர்ஆர்ஆர் டீம்
தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் படம் வரும் ஜன-7ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இயக்குனர் ராஜமவுலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆர் மற்றும் ஆலியா பட் ஆகியோர், தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தப்படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பம்பரமாக சுற்றி வருகிறார்கள். குறிப்பாக பாலிவுட்டில் இந்தப்படத்தின் ரிலீஸில் பிரமாண்டம் காட்ட வேண்டும் என முடிவு செய்து சமீபத்தில் சல்மான்கானை சிறப்பு விருந்தினராக அழைத்து மிகப்பெரிய புரமோஷன் நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
அதேபோல தற்போது முக்கியமான பாலிவுட் மீடியாக்களில் கலந்துகொண்டு பேட்டிகளும் அளித்து வருகிறார்கள். அந்தவகையில் பாலிவுட்டில் நடிகர் கபில் சர்மா நடத்தும் காமெடி ரியாலிட்டி ஷோ ரொம்பவே பிரபலமானது. அந்த நிகழ்ச்சியில் ஆர்ஆர்ஆர் டீம் இன்று கலந்துகொள்கிறார்கள். இதுபற்றிய தகவலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னதாக தெலுங்கிலிருந்து சாஹோ படம் வெளியான சமயத்தில் பிரபாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.