3 ஆண்டுகளில் நிலவுக்கு செல்ல உள்ள மனிதர்கள்.

20.12.2025 12:53:05

விண்வெளி ஆராச்சியில் கவனம் செலுத்தி வரும் உலக நாடுகள் பலவும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி, பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், 1969 முதல் 1972 வரை நிலவுக்கு 6 முறை மனிதர்களை அனுப்பியது அமெரிக்காவின் நாசா. அதன் பின்னர் மனிதர்கள் சென்றதில்லை. மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் திட்டமிட்டு வருகின்றன.

இந்நிலையில், 2028 ஆம் ஆண்டிற்குள் நிலவுக்கு அமெரிக்க விண்வெளி வீரர்களை அனுப்ப வேண்டும் என அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

"அமெரிக்க விண்வெளி மேன்மையை உறுதி செய்தல்" என்று தலைப்பிலான நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

விண்வெளியில் அமெரிக்க தலைமையை வலுப்படுத்துவதே இந்த உத்தரவின் நோக்கமாகும் என்று அறிக்கை கூறுகிறது.

அடுத்த தலைமுறை விண்வெளி ஏவுகணை தடுப்பு அமைப்புகளை உருவாக்குதல், விண்வெளி அச்சுறுத்தல்களை கண்டறிய நவீன தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல், 2030 ஆம் ஆண்டிற்குள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மாற்றாக வணிக ரீதியிலான விண்வெளி நிலையத்தை உருவாக்குதல் ஆகியவை இதில் உள்ளன.

மேலும், நிலவில் அணு உலைகளை அமைக்கவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

2030 ஆம் ஆண்டு சீனாவும், 2040 ஆம் ஆண்டில் இந்தியாவும் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நிலையில், டிரம்ப்பின் இந்த அறிவிப்பு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் போட்டியை தீவிரப்படுத்தியுள்ளது.