
வட மாகாண சட்டத்தரணிகள் இன்று ஒருநாள் பணிப்புறக்கணிப்பில்!
உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது பொலிஸாரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வட மாகாண சட்டத்தரணிகள் இன்று (7) ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா உள்ளிட்ட மாவட்டங்களை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணிகள் இணைந்து போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்துள்ளனர்.
இந்தப் போராட்டமானது யாழ்ப்பணத்தில் உள்ள நீதிமன்ற வளாகம் முன்னிலையில் இன்று காலை (07) ஆரம்பமானது.
இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் காணி உறுதி மோசடிகளில் ஈடுபட்டார்கள் என சட்டத்தரணிகள் சிலருக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் நேற்று முன்தினம் காணி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான சட்டத்தரணி ஒருவரை கைது செய்யும் நோக்குடன் அவரது வீட்டுக்கு சென்ற பொலிஸார் வீட்டினுள் சென்று தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
வீட்டினுள் சென்று தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுக்க எவ்வித நீதிமன்ற அனுமதியும் பெறாது பொலிஸார் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து தேடுதல் மேற்கொண்டதாகவும் , பொலிசாரின் நடவடிக்கையை கண்டித்து வடமாகாண சட்டத்தரணிகள் இன்றைய தினம் நீதிமன்றங்களில் வழக்குகளுக்கு தோன்றாது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன் , நீதிமன்றங்களுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இதேவேளை , காணி மோசடி குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்துள்ள சட்டத்தரணிகள் தம்மை பொலிஸார் கைது செய்வதனை தடுக்கும் முகமாக நாளைய தினம் (08) நீதிமன்றங்களில் முன் பிணை கோரவுள்ளதாகவும் அறியமுடிகிறது.