தொழிலாளர்களுக்கான வாய்ப்புக்களை அதிகரிக்குமாறு கோரிக்கை

08.01.2022 05:19:24

கொரியக் குடியரசின் பிரதம மந்திரியை சந்தித்த வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இலங்கைத் தொழிலாளர்களுக்கு கொரியக் குடியரசில் அதிகரித்த வேலை வாய்ப்புக்கள் குறித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது தென் கொரியாவில் சுமார் 22,000 இலங்கைத் தொழிலாளர்கள் இருப்பதாகவும், ஒவ்வொரு வருடமும் சுமார் 520 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவர்கள் எமது நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதாகவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.

கொவிட் 19 தொற்றுநோயின் காரணமாக தென் கொரியாவிற்கு இலங்கைத் தொழிலாளர்கள் திரும்புவது இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்கள் படிப்படியாகத் திரும்புவதற்கு அனுமதித்தமைக்காக கொரியக் குடியரசிற்கு அமைச்சர் பீரிஸ் நன்றிகளைத் தெரிவித்தார்.

ஈ.பி.எஸ். திட்டத்தின் அடிப்படையில் இலங்கைத் தொழிலாளர்களுக்கு விரிவாக்கப்பட்ட வாய்ப்புக்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்த அவர், அனைத்து சாதனை நோக்கங்களுக்காகவும், 16 தொழிலாளர்களை அனுப்பும் நாடுகளில் வாராந்த அடிப்படையில் சியோலுக்கு நேரடியாகச் செயற்படும் ஒரே தேசிய விமான நிறுவனம் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் மட்டுமே என சுட்டிக்காட்டினார்.

கொரியக் குடியரசில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிகளை தென்கொரிய அரசாங்கம் தீவிரமாக ஆராயும் என கொரியக் குடியரசின் பிரதமர் தெரிவித்தார்.