என்ன நடக்குது தமிழக அரசியலில்?
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் கூட்டணி கணக்குகள் இன்னும் இறுதி வடிவம் பெறவில்லை. குறிப்பாக, பாட்டாளி மக்கள் கட்சி இதுவரை தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தாமல் இருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே சில கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக தகவல்கள் கசிகின்றன. 86 வயதான ராமதாஸின் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பதை யாராலும் எளிதில் கணிக்க முடியவில்லை.
இந்த சூழலில், பிரிந்து கிடக்கும் பாமகவின் வாக்குகளை ஒருங்கிணைத்து, அவர்களை மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வலுவாக நிலைநிறுத்த அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
அதே சமயம், தேமுதிக உள்ளிட்ட மற்ற தோழமை கட்சிகளும் இன்னும் அதிகாரப்பூர்வமாக தங்கள் கூட்டணியை உறுதி செய்யாமல் மவுனம் காத்து வருகின்றன. ஜனவரி மாத இறுதிக்குள் ஒரு வலுவான கூட்டணி அமையாவிட்டால், அது களப்பணியில் இருக்கும் தொண்டர்களிடையே பெரும் சோர்வையும் நம்பிக்கையின்மையையும் உண்டாக்கும் என அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.