மராட்டியத்தில் தொடரும் சோகம்

07.11.2021 10:29:23

இந்தியாவிலேயே அதிக கொரோனா பாதிப்பை சந்தித்த மராட்டியத்தில், தற்போது தொற்று பரவலின் தாக்கம் தணிந்துள்ளது.

 

மாநிலம் முழுவதும் தற்போது சுமார் 15 ஆயிரம் பேர் மட்டுமே கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இருப்பினும் புனே அருகே உள்ள அகமதுநகர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் 20 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த வார்டில் நேற்று காலை 11 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கரும்புகை அதிகளவில் வெளியேறி அந்த பகுதியே புகை மண்டலமானது.

 

அவசர சிசிச்சையில் இருந்த கொரோனா நோயாளிகள் செய்வதறியாமல் திகைத்தனர். தீயின் வெப்பம் தாங்க முடியாமல் துடித்தனர். அவர்களை காப்பாற்ற ஆஸ்பத்திரி ஊழியர்கள் முயற்சித்தனர்.

 

தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் ஒருபுறம் மீட்பு பணியிலும், மற்றொரு புறம் தீயணைப்பு பணியிலும் துரிதமாக ஈடுபட்டனர். அனைவரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றுக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதில் 10 பேர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

மேலும் 7 பேர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

உயிரிழந்த அனைவரும் மூத்த குடிமக்கள் ஆவர். அவர்கள் 65 வயது முதல் 83 வயது வரையிலானவர்கள். இவர்களில் சிலருக்கு தீக்காயம் ஏற்பட்டு இருந்தது. சுவாசம் கிடைக்காமல் பலர் உயிரிழந்தது தெரியவந்தது.

 

இது குறித்து தீயணைப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், “தீயை விட புகை மூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் வார்டுக்குள் நுழைவது பெரும் சிரமமாக இருந்தது. மேலும் பரிதவித்த 20 பேரில் 15 கொரோனா நோயாளிகள் ‘வென்டிலேட்டர்’ உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்கள். மீட்பு பணியின் போது ‘வென்டிலேட்டரை’ அகற்றி அவர்களை மீட்க வேண்டியது இருந்தது.

 

எப்படியாவது நோயாளிகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் வென்டிலேட்டரை அகற்றி அவர்களை வெளியே மீட்டு வந்து பின்னர் உடனடியாக ஆக்சிஜன் இணைப்பு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்தோம். இது சவாலான பணியாக இருந்தது. மேலும் நோயாளிகளின் அழுகுரலுக்கு மத்தியில் எங்களது மீட்பு பணி பதற்றமாக இருந்தது” என்றார்.

 

இதற்கிடையே தீயணைப்பு வீரர்கள் போராடி மதியம் 1.30 மணி அளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 

தீ விபத்து நடந்த ஆஸ்பத்திரியை அகமது நகர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர போஸ்லே நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்து இருக்கலாம் என்றார்.

 

புகை மூட்டத்தால் மூச்சு திணறல் காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்தார்களா? அல்லது ஆக்சிஜன் வினியோகத்தில் ஏற்பட்ட இடையூறு காரணமாக உயிரிழந்தார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தப்படும் என்றும் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

 

இந்த துயர சம்பவத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, விரிவான விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டார். மேலும் இதில் தவறு இழைத்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

 

ஆஸ்பத்திரி தீ விபத்தில் கொரோனா நோயாளிகள் உயிரிழந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

 

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வலைத்தள பதிவில், “மராட்டிய அரசு ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களை நினைத்து மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்” என்று கூறியுள்ளார்.

 

ராகுல்காந்தி தனது முகநூல் பக்க பதிவில், “அகமதுநகர் ஆஸ்பத்திரி தீ விபத்து செய்தி வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். நிவாரண பணிகளில் ஈடுபட்டு காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.