பல்கலைக்கழகங்களில் செம்மொழி தமிழ் இருக்கை

23.01.2022 09:14:40

‘கலைஞர் மு.கருணா நிதி செம்மொழி தமிழாய்வு அறக்கட்டளை' மூலமாக ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது.

 

ரூ.10 லட்சம் பாிசுத்தொகை

 

இந்த விருது இந்தியாவிலேயே மிக உயரிய வகையில் ரூ.10 லட்சம் பரிசுத்தொகையும், பாராட்டு சான்றிதழும், வெண்கலத்தாலான கருணாநிதியின் உருவச்சிலையும் அடங்கியதாகும்.

 

கடந்த 2010 முதல் 2019 வரையிலான 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படாமல் இருந்தது. தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வளர்ச்சிக்கான முன்னெடுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

 

10 ஆண்டுகளுக்கு ஒப்புதல்

 

அவ்வகையில் நிறுவனத்தின் 8-வது ஆட்சிக்குழு கூட்டம் முதல்-அமைச்சரின் தலைமையில் 30-8-2021 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2010-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளுக்குரிய கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகளுக்கான விருதாளர்கள் பட்டியல் மீது ஒப்புதல் பெறப்பட்டது.

 

அதன்படி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகள் வழங்கும் விழாவில், 2011-ம் ஆண்டுக்கான விருது பொன்.கோதண்டராமனுக்கும் (முன்னாள் துணைவேந்தர், சென்னை பல்கலைக்கழகம்), 2012-ம் ஆண்டுக்கான விருது இ.சுந்தரமூர்த்திக்கும் (முன்னாள் துணைவேந்தர், தமிழ் பல்கலைக்கழகம்), 2013-ம் ஆண்டுக்கான விருது ப.மருதநாயகத்துக்கும் (முன்னாள் இயக்குநர், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம், முன்னாள் பதிவாளர், புதுவை பல்கலைக்கழகம்), 2014-ம் ஆண்டுக்கான விருது கு.மோகனராசுவுக்கும் (முன்னாள் பேராசிரியர் மற்றும் தலைவர், திருக்குறள் ஆய்வு மையம், சென்னை பல்கலைக்கழகம், சென்னை), 2015-ம் ஆண்டுக்கான விருது மறைமலை இலக்குவனாருக்கும் (முன்னாள் தமிழ் பேராசிரியர், மாநிலக்கல்லூரி, சென்னை), 2016-ம் ஆண்டுக்கான விருது கா.ராஜனுக்கும் (முன்னாள் பேராசிரியர், வரலாற்றுத்துறை, புதுவை பல்கலைக்கழகம்), 2018-ம் ஆண்டுக்கான விருது கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கும் (முன்னாள் தமிழ் பேராசிரியர், புதுக்கல்லூரி, சென்னை), 2019-ம் ஆண்டுக்கான விருதை கு.சிவமணிக்கும் (முன்னாள் முதல்வர், கரந்தை புலவர் கல்லூரி, தஞ்சாவூர்-திருவள்ளுவர் கல்லூரி, நெல்லை) வழங்கி பேசினார்.

 

அப்போது அவர் கூறியதாவது:-

 

கனவை நிறைவேற்றிய கருணாநிதி

 

தமிழுக்கு செம்மொழி தகுதி ஏற்பட வேண்டும் என்பது தமிழறிஞர்களின் நூற்றாண்டு கனவு. அந்த கனவை நிறைவேற்றியவர் கருணாநிதி. தமிழ் குறிப்பிட்ட நாட்டு மக்கள் பேசும் மொழியாக மட்டு மல்ல, ஒரு பண்பாட்டின் அடையாளமாக இருக்கிறது நம்முடைய தமிழ் மொழி. 2004-ம் ஆண்டு அக்டோபர் 14-ந் தேதி, மத்திய அரசால், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தமிழ்மொழி, செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள பாலாறு இல்லத்தில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அலுவலகத்தை 2008-ம் ஆண்டு ஜூன் 30-ந் தேதி கருணாநிதி திறந்து வைத்தார்.

 

செம்மொழி நிறுவனத்துக்கு என தனியாக ஒரு கட்டிடம் அமைய வேண்டும் என்று கருணாநிதி ஆசைப்பட்டார். கடந்த 12-ந் தேதி அந்த கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்திருக்கிறார்.

 

அரசியல்

 

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு 2008-ம் ஆண்டு ஜூலை 24-ந் தேதி தனது சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயை கருணாநிதி வழங்கினார். ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் அறக்கட்டளை’ என்ற பெயரால் ஓர் அறக்கட்டளையை நிறுவினார். இந்த அறக்கட்டளை சார்பில் தகுதி சால் தமிழறிஞர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்று கருணாநிதி விரும்பினார்.

 

முதல் விருது 2010-ம் ஆண்டு ஜூன் 23-ந் தேதி கோவையில் நடைபெற்ற உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில், அன்றைய ஜனாதிபதியால் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘அஸ்கோபார்ப்போலாவுக்கு’ வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக ஆண்டுதோறும் இந்த விருதை தொடர்புடைய அரசுகள் வழங்கி இருக்க வேண்டும். அதை இந்த மேடையில் பேசி நான் அரசியலாக்க விரும்பவில்லை.

 

செம்மொழிச்சாலை

 

தமிழுக்கு, தமிழறிஞர்களுக்கு செய்ய வேண்டிய பாராட்டுகள், மரியாதையில் கூட அரசியல் புகுந்ததன் காரணமாக, 2011-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை இந்த விருதுகள் வழங்கப்படவில்லை. தி.மு.க. அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு விருதாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்கள். வேறு எதற்காக இல்லாவிட்டாலும் - தமிழறிஞர்களுக்கு விருது கொடுப்பதற்காகவாவது, தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க. ஆட்சி மலர்ந்ததை நினைத்து இன்றைய நாளில் நான் பெருமைப்படுகிறேன்.

 

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகம் அமைந்துள்ள மேடவாக்கம்-சோழிங்கநல்லூர் இணைப்புச்சாலை இனி “செம்மொழிச்சாலை” என பெயர் மாற்றம் செய்யப்படும்.

 

செம்மொழி தமிழ் இருக்கை

 

செம்மொழி சிறப்புகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் வகையில் முதல்கட்டமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள 5 பல்கலைக்கழகங்களில் ‘செம்மொழி தமிழ் இருக்கைகள்’ அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

தமிழ் மொழிக்கு வளம் சேர்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல திட்டங்களை செம்மொழி நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. செம்மொழி நிறுவனம் முன்வைத்துள்ள இலக்குகளை அடைய, தமிழ்நாடு அரசு எப்போதும் துணை நிற்கும். விருது பெற்ற தமிழறிஞர்கள் அனைவரையும் நான் மனதார பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். உங்களுக்கு விருது வழங்கியதன் மூலமாக செம்மொழி நிறுவனம் பெருமை அடைகிறது. ஏன், நானும் பெருமை அடைகிறேன், தமிழ்நாடு அரசும் பெருமை அடைகிறது. இந்த விருதின் மூலமாக தமிழ்மொழி மேலும் சிறப்படைய பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை நீங்கள் தொடர வேண்டும்.

 

தமிழ் ஆட்சி மொழி

 

மொழி குறித்த ஆய்வுகள் தமிழ்நாட்டோடு, இந்திய எல்லையோடு முடிந்துவிடாமல் உலகளாவியதாக அமைய வேண்டும். உலக மொழியியல் கோட்பாடுகளை உள்ளடக்கியதாக நமது ஆய்வுகள் அமைய வேண்டும். உலக மொழியியல் அறிஞர்கள் அனைவரும் தேடி வரக்கூடிய இடமாக செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் நிச்சயமாக மாறும். அப்படி உயர்ந்து நிற்க வேண்டும்.

 

தமிழை ஆட்சிமொழியாகவும், வழக்காடு மொழியாகவும் மேலும் உயர்த்திட தி.மு.க. அரசு தொடர்ந்து குரல் கொடுக்கும்.

 

இவ்வாறு அவர் பேசினார்.

 

அமைச்சர் துரைமுருகன்

 

விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப்பண்பாடு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.எல்.ஏ.க்கள் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, க.கணபதி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன துணைத்தலைவர் இ.சுந்தரமூர்த்தி, இயக்குநர் இரா.சந்திரசேகரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

மேற்கண்ட தகவல் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.